search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
    X
    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.

    நோயாளிகளிடம் லஞ்சம்- அரசு ஆஸ்பத்திரிகளில் அதிரடி சோதனை

    தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். #TNGovtHospitals #Bribe
    சென்னை:

    தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.

    அரசு ஆஸ்பத்திரிகளில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

    இதனை கருத்தில் கொண்டே ஆஸ்பத்திரிகளில் ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளுக்கும் குறைந்த கட்டணத்தையே அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் சிகிச்சைக்கு வரும் ஏழை நோயாளிகளிடம் குறிப்பிட்ட தொகையை கேட்டு வாங்குவதாக புகார் இருந்து வந்தது.

    இதேபோல மகப்பேறு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பெறும் பெண்களை பார்க்க வரும் நோயாளிகளிடமும் லஞ்சம் கேட்பதாகவும் நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒரு பெண்ணை பிரசவத்துக்காக அனுப்பிவிட்டு வார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினர்களிடம் பிறந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தெரிவிப்பதற்கு கூட லஞ்சம் கேட்கும் அவலம் அரசு ஆஸ்பத்திரிகளில் நீடித்து வருகிறது.

    இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதும் பெரிய குறையாகவே உள்ளது.

    அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்சம் புரையோடி கிடப்பதால் அது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களும் ஆஸ்பத்திரிகளில் இடம் பெற்றுள்ளது. அதில் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு யாரும் லஞ்சமாக பணமோ, பொருளோ கொடுக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

    ஆனால் இதையெல்லாம் ஆஸ்பத்திரி பணியாளர்கள் யாரும் கண்டு கொள்வதே இல்லை. இஷ்டத்துக்கு நோயாளிகளிடம் கை நீட்டும் பழக்கம் தொடர் கதையாகி வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் லஞ்ச வேட்டை நடத்தப்பட்டது. காலையில் அரசு ஆஸ்பத்திரிகளில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர். நோயாளிகளிடமும், அவர்களை பார்க்க வந்த உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அரசு பொது மருத்துவமனைகள் மட்டுமின்றி, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சோதனை நடைபெற்றது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தியிடம் விசாரணை நடத்திய போலீசார் லஞ்சப் புகார் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் விரிவாக விசாரித்தனர்.

    திருவல்லிக்கேணி கஸ்தூரிபா ஆஸ்பத்திரியிலும் சோதனை நடத்தப்பட்டது. பிரசவத்துக்கு பின்னர் ஆண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.1000-மும், பெண் குழந்தையை காட்டுவதற்கு ரூ.500-ம் கேட்பதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

    எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சென்னை லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு சங்கர் தலைமையில் 10 அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். அவர்கள் மருத்துவ கண்காணிப்பாளர், நர்சுகள், டாக்டர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருந்து குடோனிலும் ஆய்வு செய்தனர்.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஒருவாரமாக எக்ஸ்-ரே, மகப்பேறு பிரிவு, ரத்த பரிசோதனை நிலையம் ஆகியவற்றை கண்காணித்து வந்தனர். இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு வார்டுக்கும் சென்று விசாரித்தனர். மகப்பேறு பிரிவிலும் சோதனை நடந்தது.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் 12 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிற்பகலில் அதிரடி சோதனையை தொடங்கினர்.

    பிரசவ வார்டு, நோயாளிகள் வருகை பதிவேடு, தலைக்காய பிரிவு உள்பட பல்வேறு வார்டுகளில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஆவணங்களை பார்வையிட்டனர். அதில் உள்ள விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    தஞ்சை ராஜாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    மகப்பேறு பிரிவில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள், உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர் ராஜன், ரூபா மற்றும் 12 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தைகள் நல வார்டிலும் சோதனை நடந்தது.

    லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உள்ளே நுழைந்ததும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. அங்கிருந்த டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கி இருப்பவர்களிடமும் பணம் வசூல் செய்யப்படுகிறதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    ஸ்கேன், எக்ஸ்ரே சென்டர், மகப்பேறு அறை, ரத்த சோதனைப்பிரிவு, ஓ.பி.சீட்டு வழங்கும் அறைகளில் உள்ள மேஜைகளை திறந்து பார்த்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தமிழகம் முழுவதும் நடந்த இந்த சோதனையால் அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும் பரபரப்பு நிலவியது. #TNGovtHospitals #Bribe
    Next Story
    ×