search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பினராயி விஜயன் கொடும்பாவி எரிப்பு- தமிழிசை மீது 3 பிரிவில் வழக்கு
    X

    பினராயி விஜயன் கொடும்பாவி எரிப்பு- தமிழிசை மீது 3 பிரிவில் வழக்கு

    கேரள முதல்வர் பினராயி விஜயன் கொடும்பாவியை போராட்டத்தின் போது எரித்த தமிழிசை மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். #PinarayiVijayan #sabarimala #bjpprotest #tamilisai

    சென்னை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. பாரதீய ஜனதா மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்கள் கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை பல்லாவரத்தில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் துரைசங்கர் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்து கொண்டார். 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    கேரள முதல்வர் பினராயி விஜயன் கொடும்பாவி போராட்டத்தின்போது தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 150 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப் பட்டுள்ளது.


    இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பக்தன், விசுவ இந்து பரிசத் மாநில செயலாளர் ராமன், பா. ஜனதா கோட்ட பொறுப்பாளர் பாஸ்கர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியன், மாவட்ட தலைவர்கள் மோகனராஜா, பாஸ்கர் உள்ளிட்டோர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

    சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் கேரள அரசின் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு கல்வீசி தாக்கினர். இதில் ஓட்டல் கண்ணாடி உடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இதுபற்றி ஓட்டல் பொது மேலாளர் அளித்த புகாரின் பேரில் ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இச்சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி ஆயிரம் விளக்கு பகுதி பொறுப்பாளரான பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். மேலும் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே தாக்குதலுக்குள்ளான ஓட்டலை மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று காலை பார்வையிட்டார்.

    தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கேரள ஓட்டல் முன்பு நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னையில் கேரள நிறுவனங்கள் செயல்படும் பகுதியில் போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.  #PinarayiVijayan #sabarimala #bjpprotest #tamilisai

    Next Story
    ×