search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது
    X

    மதுரையில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேர் கைது

    மதுரையில் வழிப்பறி கொள்ளையர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. மோட்டார் சைக்கிளில் வரும் கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்து கண் இமைக்கும் நேரத்தில் பெண்களை தாக்கி நகை பறித்துச் செல்வதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    நாள்தோறும் நகை பறிப்பு, வழிப்பறி போன்றவை தொடர்பான புகார்கள் போலீஸ் நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்த நிலையில் வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் போலீசாருக்கு உத்தர விட்டார். மேலும் தனிப் படையும் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    கடந்த வாரம் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேரை சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்து 158 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் மேலும் 6 பேர் சிக்கினர்.

    நகை பறிப்பில் ஈடுபட்டவர்களை பிடிக்க சட்டம், ஒழுங்கு துணை கமி‌ஷனர் சசிமோகன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தனிப்படை போலீசார் கூடல்நகர் பகுதியில் நகை பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது 6 பேர் கொண்ட கும்பல் அடிக்கடி நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் மதுரை ஆனையூரைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 28), சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்த தினேஷ் (24), வண்டியூரைச் சேர்ந்த அஜித் (23), புதூர் கார்த்திக் (25), வில்லாபுரம் மொட்டை செல்வம் (24), ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்த காளிமுத்து ஆகிய 6 பேர் என தெரியவந்தது.

    போலீசார் அவர்களை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகள், அண்டை மாவட்டங்களில் 30 நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட் டுள்ளது தெரியவந்தது.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் நடந்து செல்லும் இளம்பெண்கள், முதியவர்களை குறிவைத்து கொள்ளைகளில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது. இவர்களிடம் இருந்து போலீசார் 85 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து வழிப்பறி கும்பலிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்த போலீசாரை, மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாராட்டினார்.

    Next Story
    ×