search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொள்ளாச்சி அருகே தீ விபத்து- ஆயில் கேன் வெடித்து 3 பேர் படுகாயம்
    X

    பொள்ளாச்சி அருகே தீ விபத்து- ஆயில் கேன் வெடித்து 3 பேர் படுகாயம்

    பொள்ளாச்சி அருகே குடோனில் ஆயில் கேன் வெடித்து சிதறியதில் 3 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பபிள்ளை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (53). இவர் பொள்ளாச்சி அடுத்த சிஞ்சுவாடியில் மஞ்சள் கிழங்கு எண்ணை குடோன் நடத்தி வருகிறார்.

    நேற்று மாலை பிளாஸ்டிக் பேரலில் இருந்த எண்ணையை இரும்பு பேரலுக்கு மாற்றும் பணி நடந்தது. இதில் மணிகண்டன் மற்றும் அவரது மகன் அக்னேஷ் (23), மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பல்ராம் (45), சஞ்சய்(42) ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. ஆயில் கேன்கள் வெடித்து சிதறின. இதில் அன்னேஷ், பல்ராம், சஞ்சய் ஆகிய 3 பேர் மீது எண்ணை தெறித்து அவர்கள் மீது தீ பற்றியது. இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் குடோனில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் அவர்கள் மீது பற்றிய தீயை அணைத்தனர். குடோனில் பற்றிய தீ 30 அடி உயரத்துக்கு எழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமானது.

    படுகாயமடைந்த 3 பேரையும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குடோன் உரிமையாளர் மணிகண்டன் காயம் இன்றி தப்பினார்.

    இது குறித்து தகவல் கிடைத்தும் பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    விபத்து குறித்து கோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    குடோனின் அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் பழைய தென்னை ஓலைகளுக்கு தீ வைத்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    Next Story
    ×