search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - ஜி.கே.வாசன்
    X

    மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது - ஜி.கே.வாசன்

    மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #MekedatuDam #GKVasan

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரி நதியின் குறுக்கே தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு ஒரு போதும் துணை போகக்கூடாது. குறிப்பாக மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 18-ம் தேதியன்று தாக்கல் செய்துள்ளது.

    இந்த அறிக்கையில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கர்நாடக அரசு காவிரி நதிநீர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுப்பதை மத்திய அரசு ஏன் அனுமதி அளிக்கிறது.

    இந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கே முதலில் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கக் கூடாது. ஏனென்றால் மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபடுவது ஏற்புடையதல்ல.


    எனவே மத்திய அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டிப்போடு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

    கர்நாடக அரசின் தொடர் வீண்பிடிவாதப் போக்கை மத்திய அரசு முறியடிக்காமல் பிரச்சனையை வேடிக்கைப் பார்ப்பது நியாயமில்லை. இப்பிரச்சனையில் மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. எனவே கர்நாடக அரசு தன்னிச்சையாக தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்ட மத்திய அரசு ஒரு போதும் அனுமதி அளிக் கக்கூடாது.

    மேலும் மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு தமிழக விவசாயிகள், பொது மக்கள் ஆகியோருக்கு உரிய காவிரி நதி நீர் தடையில்லாமல் கிடைப்பதற்கு வழி வகைச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MekedatuDam #GKVasan

    Next Story
    ×