search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு வேலை வாங்கித்தருவதாக அமைச்சர் பெயரில் மோசடி - விருதுநகரை சேர்ந்தவர் கைது
    X

    அரசு வேலை வாங்கித்தருவதாக அமைச்சர் பெயரில் மோசடி - விருதுநகரை சேர்ந்தவர் கைது

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரில் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட விருதுநகரை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    விருதுநகரை சேர்ந்தவர்கள் மாரிராஜ், பெரியசாமி. இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் வசூல் செய்தனர்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தாங்கள் உதவியாளராக வேலை பார்ப்பதாகவும், எனவே அரசு வேலை எளிதாக வாங்கிவிடலாம் என்றும் பணம் வசூலித்தனர். அரசு வேலை வி‌ஷயமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

    இதை நம்பி அவரிடம் பலர் பணம் கொடுத்தனர். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

    இந்தநிலையில் மாரி ராஜும், பெரியசாமியும் மீண்டும் அபிராமபுரம் பகுதிக்கு வந்தனர். இதே போல் பணம் வசூலில் ஈடுபட்டனர். ஏற்கனவே பணம் கொடுத்தவர்கள் இதை அறிந்து அந்த பகுதியில் திரண்டனர். அவர்கள் மாரிராஜ், பெரியசாமியிடம் அரசு வேலை தொடர்பாக கேட்டனர். அப்போது இருவரும் மழுப்பலான பதிலை தெரிவித்தனர்.

    திடீரென்று அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அதில் மாரிராஜை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பெரிய சாமி அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்ட மாரிராஜை பொதுமக்கள் அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரும் லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் அபிராமபுரம் பகுதியில் மட்டும்தான் மோசடியில் ஈடுபட்டார்களா அல்லது தங்கள் சொந்த ஊரான விருதுநகர் பகுதியிலும் மோசடியில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடக்கிறது.

    தப்பி ஓடிய பெரிய சாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    Next Story
    ×