search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் 2 இடங்களில் வைகோ உருவபொம்மை எரிப்பு- பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு
    X

    நாகர்கோவிலில் 2 இடங்களில் வைகோ உருவபொம்மை எரிப்பு- பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு

    பிரதமருக்கு வைகோ கறுப்புக்கொடி காட்டியதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து அவரது உருவபொம்மையை எரித்தனர். #vaiko #pmmodi #bjp

    நாகர்கோவில்:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதுரைக்கு வந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு அடிக்கல் நாட்டி பேசினார்.

    பிரதமர் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அந்த கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மோடிக்கு எதிராக அவர்கள் கறுப்புக் கொடியும் காட்டியதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பிரதமருக்கு வைகோ கறுப்புக்கொடி காட்டியதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைகோ உருவ பொம்மைகளை எரித்தும் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

    குமரி மாவட்டத்திலும் பாரதீய ஜனதா கட்சியினர் வைகோ உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகர்கோவிலில் கோட்டார் ஆனைப்பாலம் அருகே பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன் தலைமையில் வைகோ உருவபொம்மை எரிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோட்டார் போலீசார் அங்கு சென்று உருவ பொம்மைக்கு வைக்கப்பட்ட தீயை அணைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் வைகோ உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா மாவட்ட துணைத்தலைர் முத்துராமன் மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் 14 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

    இவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதேபோல ஈத்தாமொழி சந்திப்பிலும், ராஜாக்கமங்கலம் ஒன்றிய பாரதீய ஜனதா கட்சி சார்பில் வைகோ உருவபொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் முத்து சரவணன் தலைமையில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் உருவபொம்மையை எரித்து வைகோவுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள். வைகோ உருவ பொம்மையை எரித்த பாரதீய ஜனதா நிர்வாகிகள் மீது வழக்குபதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #vaiko #pmmodi #bjp

    Next Story
    ×