search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் - நடிகை குஷ்பு
    X

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் - நடிகை குஷ்பு

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Kushboo #Congress

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்புவுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் குழு உறுப்பினர், பிரசார குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    கூடுதல் பொறுப்புகளை ஏற்றுள்ள குஷ்பு தேர்தல் பிரசார வியூகங்களை எவ்வாறு வகுக்கபோகிறார் என்பது குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    பிரசார வியூகம் என்ன என்பதை தனிப்பட்ட முறையில் என்னால் எதுவும் சொல்ல முடியாது அதற்காக எங்கள் குழு கூடி ஆலோசித்து முடிவுசெய்யும்.

    காங்கிரசை பொறுத்த வரை இத்தனை ஆண்டு காலம் நாட்டிற்கு என்னென்ன செய்தது என்பதை தண்டோராபோட்டு விளம்பரம் தேடியது கிடையாது. ஏனெனில் அது எங்கள் கடமை. ஆனால் பா.ஜனதா கட்சி பொய், பொய், பொய் எதற்கெடுத்தாலும் பொய். சொல்லி மக்களை ஏமாற்ற தண்டோராபோட்டு விளம்பரப்படுத்துகிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்த போது மோடி எதிர்த்தார். ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தான் சாமானிய மக்களை காப்பாற்றியது. இப்போது அந்த திட்டத்திலும் சுமார் 30 முதல் 35 நாட்கள் வரை மட்டுமே வேலை கொடுத்து விட்டு மிகப்பெரிய முறைகேடு செய்து வருகிறார்கள்.

    ஆட்சிக்கு வந்த போது ஊழல் இல்லாத அரசை தருவேன். வறுமையை ஒழிப்பேன் என்று சொன்னாரே செய்தாரா? அடிமட்ட மக்களுக்கு உருப்படியான நல்ல திட்டங்கள் ஏதாவது செய்தாரா? ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்களுக்கு விவசாயிகளுக்கு கொடுக்கும் ரூ. 6000 பெரிதாக தெரியாது என்று மோடி காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கிறார்.

    காந்தி முதல் நேரு தொடங்கி ராஜீவ் காந்தி வரை பல தலைவர்கள் தங்கள் சொகுசான வாழ்க்கையையும், உயிரையும் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள். ஆனால் காந்தியை கொன்ற கோட்சேவை மகாத்மா என்று நீங்கள் தான் கொண்டாடுகிறீர்கள்.

    உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது ரூ.72 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் மோடி அரசு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது 16 கோடி மக்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்து மீட்டோம். ஆனால் இப்போது வெறும் 56 இன்ஞ் நெஞ்சு இருப்பதாக மார்தட்டினால் போதாது. நாங்கள் உண்மையைத்தான் பேசுவோம். மக்களிடம் உண்மையைத்தான் சொல்வோம்.

    இன்று முத்ரா வங்கி திட்டம் என்று மூலைக்கு மூலை பேசுகிறீர்களே. இந்திரா காந்தி காலத்திலேயே வங்கிகள் நாட்டுடமையாக்கப்பட்டது. நீங்கள் சொல்லும் டிஜிட்டல் இந்தியா என்பதும், ராஜீவ் கண்ட கனவும் அத்தனையும் காங்கிரஸ் விதை போட்டு வளர்த்தது. நீங்கள் இப்போது வெறுமனே ரிப்பன் வெட்டி கைதட்டு பெறுகிறீர்கள்.

    அன்னிய நேரடி ஒதுக்கீடு பற்றி காங்கிரஸ் ஆட்சியின் போது பேசப்பட்டதாகவும், குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடி அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம். என் பிணத்தின் மீது தான் அது முடியும் என்றும் கூறினார். ஆனால் இப்போது செய்வது என்ன? 100 சதவீதம் அன்னிய முதலீட்டை தானே அனுமதிக்கிறார்.

    தான் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் மாற்றத்தை தருவேன் என்றார். 5 வருடமாகியும் எந்த மாற்றமும் தெரியவில்லையே. ஏதோ சுதந்திரம் கிடைத்தது போல் பண மதிப்பு நடவடிக்கையையும், ஜி.எஸ்.டி வரித் திட்டத்தையும் நள்ளிரவில் அறிவித்தார். அதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது.

    ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றீர்கள். எத்தனை பேருக்கு வேலை கொடுக்கப்பட்டது என்ற புள்ளி விவரத்தை ஏன் வெளியிட மறுக்கிறீர்கள். உங்கள் ஏமாற்று திட்டங்களை எல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

    எங்களுடைய பிரசாரம் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி மட்டுமல்ல கூட்டணி கட்சிகளின் தொகுதிகளிலும் பிரசாரம் செய்வேன். என்னை பொறுத்தவரை வெளிப்படையாக பேசுவேன். சரி என்றால் சரி என்பேன். தவறு என்றால் தட்டிக்கேட்கவும் தயங்கமாட்டேன்.

    திருநாவுக்கரசருக்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. கட்சியில் சில செயல்பாடுகள் சரியாக படவில்லை. அதைத்தான் நான் கூறினேன். இப்போதும் ஒரே குழுவில்தான் நாங்கள் பணியாற்றப்போகிறோம். தேர்தலில் நான் போட்டி போடுவேனா என்பது தெரியாது. யார் போட்டியிட வேண்டும். யார் சரியான வேட்பாளர் என்பதை எல்லாம் ராகுல்காந்திதான் முடிவு செய்வார்.

    நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பது பற்றி எல்லாம் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்க வில்லை. அந்த பணிகளெல்லாம் முடிந்த பிறகுதான் எந்த தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பது பற்றி ராகுல்காந்தி முடிவு எடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×