search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
    X

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 21 சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் கமி‌ஷனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி தலைமை தேர்தல் கமி‌ஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமி‌ஷனர் அசோக் லாவாசா ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    ஒரு தொகுதி “காலியிடம்” என்று அறிவிக்கப்பட்டதும் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். 18 சட்டமன்ற தொகுதிகளும் 18.9.2017 அன்றே காலியானதாக அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான வழக்கின் தீர்ப்பும் 25.10.2018 அன்றே அளிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதே போல் திருவாரூர், திருப்பரங்குன்றம்,ஓசூர், ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளும் காலியாக உள்ளன.

    திருவாரூர் தொகுதியைப் பொறுத்தமட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்றைய தேதியில் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தில் 21 தொகுதிகள் காலியாக உள்ளன.

    ஆகவே இந்த தொகுதிகளுக்கு எல்லாம் உடனடியாக தேர்தலை நடத்தவில்லையென்றால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அரசியல் சட்ட கடமையை தேர்தல் ஆணையம் மீறுவதாக அமைந்து விடும்.

    வருகிற ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக பத்திரிக்கை செய்திகள் வயிலாக அறிந்து கொண்டேன். ஆகவே மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.

    அவ்வாறு 39 மக்களவை தொகுதிக்கான தேர்தலுடன் இந்த சட்ட மன்ற தொகுதிகளின் தேர்தலையும் நடத்துவது வாக்காளர்களுக்கு வசதியாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கவும், தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சவுகரியமாகவும் இருக்கும்.

    மேலும் அரசு கஜானாவிற்கு மற்றுமொரு தேர்தல் செலவு ஏற்படாமல் தவிர்க்கும். தனியாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதால் அரசியல் கட்சிகள் அனைத்துமே இதனால் பயனடையும்.

    மக்களவைத் தேர்தலுக்கும், இந்த 21 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல்தான் என்பதால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக்கோருவதில் நியாயம் இருக்கிறது.

    ஆகவே, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 21 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் நடைபெறவிருக்கின்ற 17-வது மக்களவை தேர்தலின் போதே இடைத்தேர்தலை நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதே போல் ஓசூர் தொகுதியை காலியிடமாக அறிவிக்கக் கோரி தமிழக கவர்னர், தலைமை தேர்தல் கமி‌ஷனர், சட்டசபை சபாநாயகர் ஆகியோருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்கு தெர்ந்தெடுக்கப்பட்ட பாலகிருஷ்ணரெட்டிக்கு பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சென்னை, சிறப்பு நீதிமன்றம் பொதுச்சொத்துக்களுக்கு நாசம் விளைவித்து கலவரம் செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது.

    மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 8-ன் கீழ் அவர் வகித்து வரும் சட்டமன்ற பதவி தானாகவே காலியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    அவர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் “சிறப்பு நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்த தீர்ப்பிற்கு” தடை பிறப்பிக்கவில்லை,

    அவர் காவல்துறையிடம் சரண்டர் ஆவதற்கு கால அவகாசத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

    எனவே ஓசூர் சட்டமன்ற தொகுதியை காலியானதாக அறிவித்து அதற்கு வழக்கமாக வெளியிட வேண்டிய அரசிதழ் அறிவிப்பை வெளியிடவும், தேர்தல் ஆணையத்திற்கு ஓசூர் தொகுதி காலியாகி விட்டது என்று அறிவிக்கவும் தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    அதே போல் தேர்தல் ஆணையமும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. ஆகவே ஓசூர் சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழ் வெளியிட்டு, அத்தகவலை தேர்தல் ஆணையத்திற்கு உடனடியாக அனுப்புமாறு தமிழக சட்டமன்ற பேரவைத் தலைவருக்கு கவர்னர் உத்தரவிட்டு அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கு வித்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க.வின் 18 சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டவுடன் கொஞ்சம் கூட நேரத்தை வீணடிக்காமல் அவர்களின் தொகுதிகள் காலியாகிவிட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப் பேரவைத் தலைவர் தெரிவித்து, தேர்தல் ஆணையமும் உடனே நடவடிக்கைகளை மேற்கொண்டதை கவர்னருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இதில் சட்டப்பேரவைத் தலைவர் அமைதிகாப்பது ஒருதலைப்பட்சமானது, ஓரவஞ்சகமானது பாரபட்சமானது. இதில் கவர்னர் உடனடியாக தலையிட்டு அறிவுறுத்த வேண்டும்.

    கடிதத்தை கனிமொழி எம்.பி., தலைமையில் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோர் இன்று, புதுடெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று அளித்தனர்.

    இதே போல் தி.மு.க. கொறடா சக்கரபாணி, துணைக் கொறடா பிச்சாண்டி ஆகியோர் இன்று காலை தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை நேரில் சந்தித்து கடிதத்தை அளித்தனர். #MKStalin

    Next Story
    ×