search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாராளுமன்ற தேர்தல்: அதிமுக-பாஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை
    X

    பாராளுமன்ற தேர்தல்: அதிமுக-பாஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை

    பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக, அதிமுக மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #ADMK #BJP #Parliamentelection

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை இன்னும் 25 நாட்களில் வெளியாக உள்ளது.

    இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளன.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி, தி.மு.க.- காங்கிரஸ் தலைமையில் மற்றொரு கூட்டணி உருவாகி வருகிறது. டி.டி.வி.தினகரன், கமல்ஹாசன் ஆகியோர் சிறிய கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு களம் இறங்க உள்ளனர். இதனால் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆனால் உண்மையான போட்டி அ.தி.மு.க., தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் நடக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் முக்கிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி உள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில் இதில் தெளிவான நிலை தெரிந்து விடும்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க., த.மா.கா. ஆகிய கட்சிகளை சேர்க்க முயற்சி நடக்கிறது.

    ஆனால் கூட்டணியில் பா.ம.க. இடம் பெற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்றாலும் பா.ம.க.வுடன் தி.மு.க., காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். எனவே தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம் பெறுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.

    அ.தி.மு.க.வும் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பாரதிய ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே பா.ம.க. வையும் அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. பா.ம.க.வுக்கு 5 தொகுதிகள் வரை விட்டுத்தர தயாராக இருப்பதாக அ.தி.மு.க., பா.ஜனதா மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். பா.ம.க. என்ன முடிவு எடுக்கும் என்பது மதில் மேல் பூனையாக உள்ளது.

     


    இந்த நிலையில் அ.தி.மு.க. - பாரதிய ஜனதா கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தக்கட்டத்துக்கு வந்துள்ளது. மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜனதாவுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது என்பதில் இருகட்சி தலைவர்களின் பேச்சுவார்த்தை நீடித்தப்படி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவுக்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள்? எந்தெந்த தொகுதிகள்? என்ற அடிப்படையில் டெல்லியில் பேச்சு நடந்தது. மத்திய மந்திரியும் தமிழக பா.ஜனதா பொறுப்பாளருமான பியூஷ் கோயலுடன், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் பேச்சு நடத்தினார்கள். இதில் இது வரை முடிவு எட்டப்படவில்லை.

    பா.ஜனதா தரப்பில் இருந்து 10 தொகுதிகள் கேட்கப்படுகிறது. அதில் 3 தொகுதிகளை பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி மற்றும் தேவநாதனின் யாதவ கட்சிக்கு கொடுத்து விட்டு மீதமுள்ள 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த பா.ஜனதா தலைவர்கள் விரும்புகிறார்கள்.

    ஆனால் 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க அ.தி.மு.க. மறுத்துள்ளது. மொத்தமே 6 தொகுதிகளை விட்டுத் தருவதாகவும், அதில் 3 இடங்களை தோழமைக் கட்சிகளுக்கு கொடுத்து விட்டு, மீதமுள்ள 3 இடங்களில் போட்டியிடும்படி அ.தி.மு.க. கூறி வருகிறது.

    இதை ஏற்க பா.ஜனதா மூத்த தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முழுமை பெறவில்லை.

    இதற்கிடையே 10 எம்.பி. தொகுதிகளை கேட்பதோடு, அந்த 10-ம் தாங்கள் கேட்கும் தொகுதிகளாக தர வேண்டும் என்று பா.ஜனதா தரப்பில் அ.தி.மு.க.விடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது அ.தி.மு.க. தலைவர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

    பா.ஜனதா கேட்கும் தென்சென்னை உள்ளிட்ட 10 தொகுதிகளும் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்குகள் உள்ள தொகுதிகள் என்பதால், பா.ஜனதா கோரிக்கை இன்னமும் ஏற்கப்படவில்லை. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. #ADMK #BJP #Parliamentelection

    Next Story
    ×