search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழைகளுக்கு தலா ரூ.2000 திட்டத்தை தேர்தலுக்காக அறிவிக்கவில்லை- சட்டசபையில் முதல்வர் விளக்கம்
    X

    ஏழைகளுக்கு தலா ரூ.2000 திட்டத்தை தேர்தலுக்காக அறிவிக்கவில்லை- சட்டசபையில் முதல்வர் விளக்கம்

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2000 என்ற திட்டத்தை தேர்தலுக்காக அறிவிக்கவில்லை என்று சட்டசபையில் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #TNAssembly
    சென்னை:

    சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பொன்முடி (தி.மு.க.) பேசினார். அவர் கூறியதாவது:-

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்படும் என்று அறிவித்தார். தேர்தலுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார், இதன் மூலம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது நிழல் பட்ஜெட் என்பதும், முதல்- அமைச்சர் வெளியிட்டது நிஜ பட்ஜெட் என்றும் தெரியவருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார்.

    நாங்கள் அறிவிக்கும் பட்ஜெட் நிஜம் என்பதால் தான் அம்மாவின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். உங்கள் (தி.மு.க.) ஆட்சியில், நீங்கள் அறிவித்ததுதான் நிழல் பட்ஜெட், எனவே நிஜ பட்ஜெட்டுக்கு மக்கள் ஆதரவு அளித்து எங்களை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள் என்றார்.

    இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

    நாங்கள் அறிவித்த திட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை உறுப்பினர் தெரிவிக்க வேண்டும், கஜா புயலில் ஆயிரக்கணக்கான ஏழைகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டார்கள். இவற்றையெல்லாம் ஆராய்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத் தான் ஏழை தொழிலாளர்களுக்காக இந்த திட்டம் அறிவிக்கப்படுகிறது.

    தேர்தலுக்காக அல்ல. அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த உதவி கிடைக்கும். அந்த கட்சி, இந்த கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த ரூ.2000 உதவி கிடைக்கும்.



    இந்த திட்டத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? என்பதை சொல்ல வேண்டும்.

    பொன்முடி:- இந்த திட்டத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. அதில் வேறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் 2 நாட்களுக்கு முன்பு பட்ஜெட் தாக்கல் செய்தபோது இதை ஏன் அறிவிக்கவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி என்றார்.

    (தொடர்ந்து பொன்முடி சில கருத்துக்களை தெரிவித்தார். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார். இருவரது கருத்துக்களையும் அவை குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் அறிவித்தார்).

    பொன்முடி: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும், கரும்பு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ:- 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.7,000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் குறைந்த அளவுதான் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்று அம்மா ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கூட்டுறவு கடன் வாங்கிய விவசாயிகளில் 83.62 சதவீதம் பேர் கடன்களை திருப்பி செலுத்தி இருக்கிறார்கள். யாரும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களைத்தான் தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

    துரைமுருகன்:- 2006-ல் ரூ.7,000 கோடி கடன் தள்ளுபடி செய்வதாக தி.மு.க. அறிவித்தது. அவை அனைத்தையும் தள்ளுபடி செய்து அதற்கான உத்தரவுகளையும் அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பி வைத்து இருக்கிறோம்.

    அமைச்சர் செல்லூர் ராஜூ:- ரூ.7,000 கோடியை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. குறைந்த அளவு பணத்தைத்தான் தள்ளுபடி செய்தீர்கள்.

    மு.க.ஸ்டாலின்:- நாங்கள் சொன்னபடி அனைத்து விவசாயிகளுக்கும் கடன்களை தள்ளுபடி செய்தோம். அந்த தொகை ஒருவேளை குறைவாக இருக்கலாம். அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்து விட்டோம் என்பதுதான் உண்மை.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ரூ.7,000 கோடி என்று சொல்லிவிட்டு ரூ.5,000 கோடி கடன்தான் தள்ளுபடி செய்யப்பட்டன. அதைத்தான் அமைச்சர் கூறுகிறார். அம்மாவின் ஆட்சியில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்கப்படுகிறது. அரசு பயிர் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.3,200 கோடி பெற்றுத் தந்து இருக்கிறோம். விவசாயிகள் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    சட்டசபையில் இன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இறப்புக்கு, ஈமச்சடங்கு மானியம் வழங்குவது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    நேற்றையதினம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஈமச்சடங்கு நிதி சரியாக போய் சேரவில்லை என்ற ஒருகருத்தை இங்கே சொன்னார். அதற்கு விளக்கத்தைதர விரும்புகின்றேன்.

    ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தவர்களில் எவரேனும் இறந்தால் அன்னாரின் இறுதிச் சடங்கு செலவுகளுக்காக இறந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது.

    இதற்காக தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடநலத்துறைக்கு ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்கிறது. இத்திட்ட நிதியினை ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் சென்னை, மதுரை, ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், கோயம்புத்தூர், திருப்பூர் மாநகராட்சிகளுக்கும் நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

    2018-19-ம் ஆண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 கோடி ரூபாயில் இதுவரை 4.67கோடி ரூபாய்உதவித் தொகை 18,692 நபர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை எதிர்க் கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். ஏதேனும் ஈமச்சடங்குநிதி முறையாக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி இருக்கின்றார்களா?

    அப்படி ஏதாவது புகார் வந்தால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த ஈமச்சடங்கு நிதி உரியவர்களுக்கு உரிய நேரத்தில் கொடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை தங்கள் வாயிலாக எதிர்க் கட்சிதுணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    2018-19-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டநிதி 5 கோடி ரூபாய். ஆகவே, அதிலே மீதி இருக்கிறது. 4.67 கோடி ரூபாய் தான் செலவழிக்கப்பட்டு இருக்கின்றது. 18,692 நபர்கள் அதற்கு மனு செய்திருக்கின்றார்கள், விண்ணப்பம் செய்திருக்கின்றார்கள்.

    இறந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி வழங்கப்படுகின்றது. ஏதேனும் விடுபட்டிருந்தால், அவர்கள் அதை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால், அவர்களுக்கு உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த திட்டத்தை நிறைவேற்றுவதே உள்ளாட்சித் துறை. நான் ஏற்கனவே சொன்னதைப் போல ஊரகவளர்ச்சித் துறை, பேரூராட்சி நிர்வாக இயக்குநரகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநகராட்சியை சேர்ந்த அதிகாரிகள்தான், இந்த ஈமச்சடங்கு நிதியை அளிக்கின்றார்கள்.

    ஆகவே, அதில் குறைபாடுகள் இருந்தால், நீங்கள் சுட்டிக்காட்டினால், யாருக்காவது ஈமச்சடங்குநிதி கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவர்களுக்கு நிதி கிடைக்கப் பெறுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNCM #EdappadiPalaniswami #TNAssembly
    Next Story
    ×