search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் மாளிகை முன்பு நாராயணசாமி இரண்டாவது நாளாக தர்ணா - புதுச்சேரியில் அதிரடிப்படை குவிப்பு
    X

    கவர்னர் மாளிகை முன்பு நாராயணசாமி இரண்டாவது நாளாக தர்ணா - புதுச்சேரியில் அதிரடிப்படை குவிப்பு

    கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், புதுச்சேரியில் அதிவிரைவு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். #Puducherry #Narayanasamy #KiranBedi
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களுக்கும் கவர்னர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கவர்னர் கிரண்பேடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார்.

    இதனால் இலவச அரிசி, தீபாவளி பொருட்கள், பொங்கல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்க முடியவில்லை. இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி இலவச பொருட்களை அனைத்து தரப்பினருக்கும் தர முடியாது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தர முடியும் என்று கூறி முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இதனால் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் இடையே தொடர்ந்து மோதல்போக்கு நிலவி வருகிறது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பேசிய முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஹெல்மெட் அணிவது குறித்து பொதுமக்களிடம் அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி படிப்படியாக சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால் கவர்னர் கிரண்பேடி, 2 சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார்.



    மேலும் இருசக்கர வாகனத்தில் சிக்குபவர்களில் பலர் உயிரிழப்பதை தவிர்க்க கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போலீசார் அமல்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 11-ந் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை போட்டு உடைத்து போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க.வினரும் கட்டாய ஹெல்மெட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

    இந்த நிலையில் மாகி சென்றிருந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை புதுவை திரும்பினார். அவர் சட்டசபை வளாகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து வந்தார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் கருப்பு துண்டும், அமைச்சர் கமலக்கண்ணன் கருப்பு சட்டையும் அணிந்திருந்தனர்.



    பின்னர் அவர்கள் மதியம் 1.30 மணியளவில் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவர்னர் மாளிகை நோக்கி சென்றனர். அவர்களுடன் காங்கிரஸ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். கவர்னர் மாளிகைக்கு சென்ற அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் கலந்து கொண்டனர். இதற்கிடையே சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கவர்னர் மாளிகையை சுற்றி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தும் செய்தி காட்டுத்தீ போல பரவியது. எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கவர்னர் மாளிகை முன்பு குவியத் தொடங்கினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே தி.மு.க.வினர் பாரதி பூங்காவின் உள்ளே சென்று கவர்னர் மாளிகை எதிரே உள்ள கேட்டிற்கு சென்றனர். அங்கு அவர்கள் கவர்னரின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.

     

    இதற்கிடையே கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கவர்னர் மாளிகை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கினர். அந்த பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அவர்கள், “கவர்னரே வெளியே போ, மோடியே வெளியே போ. இது எங்கள் ஊர், எங்கள் மண், எங்களை ஆள நீ யார்?” என்று கோஷங்கள் எழுப்பினர். மேலும் போலீசாரின் தடுப்பை மீறி கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல முயற்சி செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் திடீரென நூதன போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சங்கு ஊதியும், மேளம் அடித்த படியும் கவர்னர் மாளிகையை சுற்றி வந்து போராட்டம் நடத்தினர். மேலும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். 

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் போராட்டத்தின் காரணமாக நேற்று கவர்னர் மாளிகை போராட்ட களமாக மாறியது.

    ஆளுநர் மாளிகை, தொடர்ந்து இரண்டாவது நாளாக முற்றுகையிடப்பட்டுள்ளதால், வெளியே செல்ல முடியவில்லை என கிரண்பேடி கூறியிருந்தார். இதையடுத்து, சென்னை, நெய்வேலியிலிருந்து புதுச்சேரிக்கு அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்புப்படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

    புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் தடுக்கும் வகையில், தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. #Puducherry #Narayanasamy #KiranBedi 

    Next Story
    ×