search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மக்கள் பலத்துடன் தனியாக நிற்கிறோம்- கமல்ஹாசன்
    X

    மக்கள் பலத்துடன் தனியாக நிற்கிறோம்- கமல்ஹாசன்

    40 தொகுதியிலும் மோதிப்பார்க்க தயார் என்றும் மக்கள் பலத்துடன் தனியாக நிற்பதாகவும் கமல்ஹாசன் பேசியுள்ளார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆளும் அ.தி.மு.க அரசை விமர்சித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக தீவிர அரசியலுக்கு வந்து கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ந்தேதி மக்கள் நீதி மய்யம் பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கமல்ஹாசனும் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார்.

    மேலும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் அரசியல் குறித்து கலந்துரையாடி வருகிறார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றது.


    இதையொட்டி இரண்டாம் ஆண்டு கட்சி தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சிக்கொடியை ஏற்றி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் எங்கும் மக்கள் நீதி மய்யம் என்னும் குடும்பம் பரவியுள்ளது. முதலில் தனியாக நின்றேன். இப்போது கூட்டம் கூடியிருக்கிறது. பெண்கள் ஆற்றும் உதவி, வியத்தகு உதவி.

    ‘கடந்த ஆண்டு இதே நாளில் தான் கொடியேற்றி கட்சியை தொடங்கினோம். நாம் பேராசைப்பட்டோம். அந்த பேராசையையும் விஞ்சி இன்று நம் கட்சி பெரிதாகி இருக்கிறது.

    இங்கே இப்போது கொடியேற்றி இருக்கிறோம். தமிழகத்தில் பல இடங்களில் கொடியேற்றிக்கொண்டு இருக்கிறது. அடுத்து எங்கே ஏற்றி வைக்கவேண்டும் என்ற இலக்கு உங்களுக்கு தெரியும். அதை நோக்கி நகர்வோம்.

    குளத்தடி மீனாக ‘மேலே மழை பொழிகிறது, புயல் அடிக்கிறது நமக்கு என்ன?’ என்று இருந்த மக்கள் இன்று வெளியே வந்து இருக்கிறார்கள். அரசியல் உதவாக்கரைகள் உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கு எடுக்கும்போது குளம் வேறு நதி வேறு கிடையாது.

    குளம் ஆறாக பெருக்கு எடுக்கும். அதன் அடையாளம் தான் இங்கே. இதன் உறவு தமிழகம் எங்கும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

    தனியாக நிற்போம் என்று சொன்னது நான் அல்ல. நாம். நாம் எப்படி தனியாக இருக்க முடியும்? நாம் என்று சொல்லும்போதே தனிமை நீங்கிவிட்டது என்றுதான் அர்த்தம்.

    அந்த தைரியத்தில்தான் கூறுகிறேன். நமக்கு மக்கள் பலம் இருக்கிறது. எந்த கணிப்பு எப்படி சொன்னாலும் மக்கள் என்கையை பிடித்து நாடி பார்த்து இங்கே புத்துயிர் இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

    அவர்கள் வைத்தியர்கள் அல்ல. வருங்காலத்தை சொல்லும் ஜோசியர்கள். அவர்களை நம்பி நான் இங்கே அடியெடுத்து வைத்து இருக்கிறேன். இந்த ஜோசியம் வேறு.

    எதிர்காலத்தை பற்றி கனவு கண்டுகொண்டு இருக்கும் பலர் அவர்களின் நினைவாக நாம் வரவேண்டும் என்று ஆசீர்வதித்து என்னை அனுப்பி இருக்கிறார்கள். நேற்று வரை நான் சொல்வது புரியவில்லை என்று கூறிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் புரியக்கூடாது என்ற பிரார்த்தனையில் இருந்தவர்கள்.

    இன்று அவர்களுக்கு புரிய தொடங்கி இருப்பதற்கு காரணம் நான் என்னுடைய சுருதியை அதிகப்படுத்தி இருக்கிறேன். அதிகம் என்பதை அதிகப்பிரசங்கம் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. நியாயமான பிரசங்கங்கள் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இன்னும் அவை வலிமை பெறும். கணக்கு வழக்குகளுடன் அவை வலிமை பெறும்.

    தமிழகத்தையும் தமிழகத்தில் நிலவும் ஊழல்களையும் உலகம் கவனித்துக்கொண்டு இருக்கிறது. எங்கே என்று நம்மை கேட்கும் இவர்களுக்கு பதிலை உலகம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

    பள்ளிக்கு செல்ல வேண்டிய மாணவர்கள் நினைவு வருகிறது. எனவே இங்கே அதிக நேரம் நின்று இடையூறு தரக்கூடாது. இது முதல் முறை அல்ல. எல்டாம்ஸ் சாலையில் இப்போது கூடிய கூட்டத்தைவிட பெரிய கூட்டம் எல்லாம் நான் கூப்பிடாமலேயே கூடி இருக்கிறது. இனிமேலும் அவ்வாறாகவே கூடும் என்ற நம்பிக்கையும் எனக்கு கூடி இருக்கிறது.

    நாம் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. கட்சி, அமைப்பு எல்லாம் தயாரா? என்று இன்னமும் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் வந்து பார்க்கட்டும். ருசித்து பார்த்தால் எங்கள் சுவை தெரியும். மோதி என்ற வார்த்தையை உபயோகிக்க விரும்பவில்லை. ஆனால் அதுதான் இதற்கு அர்த்தம்.

    இங்கே நமக்கு நிறைய வேலை இருக்கிறது. குறுகிய நாட்களே இருக்கின்றன. மக்களின் பலம் என்ன என்பதை நீங்கள் நிரூபிப்பதற்கான அரிய வாய்ப்பு ஒன்று உங்கள் முன்னால் இருக்கிறது. அதில் சிறிய கருவியாக நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். இந்த கருவியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழகம் மேம்படட்டும். நாளை நமதே’.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    தலைமை அலுவலகத்தில் கொடியேற்றிய பிறகு கமல்ஹாசன் விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார். அங்கிருந்து வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளபள்ளம் என்ற கிராமத்துக்கு சென்று அங்கு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார்.

    இன்று மாலை திருவாரூரில் நடைபெறும் பொதுகூட்டத்தில் பேசுகிறார். #MakkalNeedhimaiam #KamalHaasan
    Next Story
    ×