search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அதிமுக கூட்டணி - தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை
    X

    அதிமுக கூட்டணி - தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை

    தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #DMDK #Vijayakanth #ADMK

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையில் பெரிய கூட்டணிகள் உருவாகி உள்ளன.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பிடித்துள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    விஜயகாந்தின் தே.மு.தி.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய இருகட்சிகளும் ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் தொகுதிகள் எண்ணிக்கை ஒதுக்கீட்டில் சுமூக முடிவு எட்டப்படாததால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் இழுபறி நீடித்தப்படி உள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பாரதிய ஜனதாவுக்கு 5 தொகுதிகள், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில் மீதம் 27 தொகுதிகள் இருக்கின்றன.

    இந்த 27 தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடத்தை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இந்த 4 கட்சிகளையும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமாறு அ.தி.மு.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

    சிறிய கட்சிகளுக்கு 4 இடங்கள் ஒதுக்கியது போக மீதம் 23 தொகுதிகள் உள்ளன. இதில் 20 தொகுதிகளில் களம் இறங்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் எஞ்சி இருப்பது 3 தொகுதிகள்தான்.

    எனவே அந்த 3 தொகுதிகளை ஏற்றுக் கொள்ளுமாறு தே.மு.தி.க. தலைவர்களிடம் அ.தி.மு.க. தலைவர்கள் கூறியுள்ளனர். இது தே.மு.தி.க. தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் கொடுத்துள்ளது. தே.மு.தி.க.வினர் முதலில் 14 தொகுதி வேண்டும் என்றனர். பிறகு 9 தொகுதி கேட்டனர்.

    அ.தி.மு.க., பா.ஜனதா தரப்பில் அவை ஏற்கப்படாததால் நேற்று தே.மு.தி.க. தலைவர்கள் சற்று இறங்கி வந்தனர். பா.ம.க.வுக்கு கொடுக்கப்பட்டிருப்பது போல 7 தொகுதிகளாவது தாருங்கள் என்று கேட்டனர். ஆனால் இதையும் அ.தி.மு.க. ஏற்கவில்லை.

    மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று அ.தி.மு.க. சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தப்படி உள்ளது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை நேற்று மதியம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்துப் பேசினார். தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் தங்கள் கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்கும் திட்டம் இல்லை என்று தி.மு.க. - காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்தனர். இதனால் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற வாய்ப்பு இல்லை என்பது உறுதியானது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. 3 விதமான முடிவுகளில் ஏதாவது ஒன்றை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    1. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிகளை தவிர்த்து விட்டு டி.டி.வி.தினகரன் அல்லது கமல்ஹாசனுடன் கூட்டணி சேருவது.

    2. யாருடனும் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடுவது.

    3. அ.தி.மு.க. தரும் தொகுதிகளைப் பெற்று கொண்டு, அந்த கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவது.

    மேற்கண்ட மூன்று விதமான முடிவுகளில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதையே பெரும்பாலான தே.மு.தி.க. மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். எனவே அ.தி.மு.க. தலைவர்களிடம் பேசி, அதிகபட்சம் எவ்வளவு தொகுதிகளை கேட்டுப் பெற முடியுமோ அவ்வளவு தொகுதிகளை வாங்கலாம் என்ற மன நிலைக்கு தே.மு.தி.க.வினர் வந்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தலைவர்களும் சற்று இறங்கி வந்திருப்பதாக தெரிகிறது. தே.மு.தி.க.வுக்கு கூடுதலாக ஓரிரு தொகுதிகளை விட்டுக் கொடுப்பது பற்றி அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    சில தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை கருத்தில் கொண்டு தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. தரப்பில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க. மூத்த மந்திரி ஒருவரும் இதை உறுதிப்படுத்தினார்.

    இதை அடிப்படையாக கொண்டு தே.மு.தி.க.விடம் அ.தி.மு.க. தலைவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்றும் அந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

    அ.தி.மு.க. ஒதுக்கி கொடுக்கும் 5 தொகுதிகளை தே.மு.தி.க. ஏற்குமா, என்று பல்வேறு தரப்பிலும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அந்த 5 தொகுதிகளும் நாங்கள் விரும்பும் தொகுதிகளாக இருக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

    தே.மு.தி.க.வின் இந்த நிபந்தனையை அ.தி.மு.க. ஏற்றுக் கொண்டால் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை இதில் இறுதி கட்ட முடிவு எடுக்கப்பட உள்ளது.  #DMDK #Vijayakanth #ADMK

    Next Story
    ×