search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி: ஜெயலலிதா பிறந்தநாளில் வரலாற்று சிறப்பு திட்டம்  - பியூஸ்கோயல்
    X

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி: ஜெயலலிதா பிறந்தநாளில் வரலாற்று சிறப்பு திட்டம் - பியூஸ்கோயல்

    விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி என்பது ஜெயலலிதா பிறந்தநாளில் வரலாற்று சிறப்பு திட்டம் என பியூஸ்கோயல் கூறியுள்ளார். #Piyushgoyal #Farmers

    சென்னை:

    இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

    தமிழகத்தில் இதற்கான தொடக்க விழா சென்னை வேப்பேரி கால் நடை மருத்துவக் கல்லூரி பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது.

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து 200 விவசாயிகள் விழாவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

    இந்த விழாவில் மத்திய மந்திரி பியூஸ்கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:-

    காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்களுக்கு எனது உயர்ந்த மரியாதையை இந்த நேரத்தில் செலுத்துகிறேன்.

    தமிழகத்தில் மிகப்பெரும் தலைவராக இரும்பு பெண்மணியாக விளங்கியவர் ஜெயலலிதா.

    அவரது நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி உருவானது. பிறந்த நாளான இன்று வரலாற்று சிறப்புமிக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நாம் அவருக்கு அளித்துள்ள உயரிய மரியாதை ஆகும்.


    அன்னதான பிரபுக்களாக விளங்கும் விவசாயிகளுக்கு நாம் உரிய மரியாதை செலுத்த வேண்டும். அவர்களது நலன் பற்றி எந்த தலைவர்களும் சிந்திக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

    இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் நாடுமுழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள்.

    தமிழகத்தில் 70 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இந்த பணம் விவசாயிகளின் எந்த விதமான கடன் தொகையிலும் பிடித்தம் செய்யப்படமாட்டாது. நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோன்று வேறு எந்த திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை.

    2004-ம் ஆண்டில் இருந்து 2009 வரை காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுக்காக ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜனதா அரசு ஒரு வருடத்திலேயே ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளது.

    விவசாயிகளைப் போன்று மீனவர் நலனிலும் மத்திய அரசு அக்கறை காட்டி வருகிறது. 4 சதவீத வட்டியில் அவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 1½ கோடி மீனவர்கள் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு பியூஸ்கோயல் பேசினார்.

    நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன், மற்றும் வானதி சீனிவாசன், பி.டி.அரசகுமார், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் பாஸ்கரன், மீன் வளத்துறை இயக்குனர் விஜயன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். #Piyushgoyal #Farmers

    Next Story
    ×