search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர் ராஜா
    X
    மாணவர் ராஜா

    பாளை அருகே கல்லூரி மாணவர் கொலையில் 19 பேரை பிடித்து போலீசார் விசாரணை

    பாளை அருகே கல்லூரி மாணவர் கொலையில் சந்தேகப்படும்படியாக உள்ள 19 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாளையங்கோட்டை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகரை சேர்ந்தவர் உஜயகுமார். இவர் முக்கூடலில் உள்ள இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராஜா (வயது19). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவர் ராஜா, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

    முன்னீர்பள்ளம் சிவன் கோவில் அருகே வந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு, கால்வாய் கரை வழியாக தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த ராஜாவின் உறவினர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து ராஜாவின் உடலை சுற்றி அமர்ந்து கதறி துடித்தனர். சம்பவ இடத்துக்கு முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து வந்து கொலையான ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர்.

    ஆனால் பொதுமக்கள் ராஜாவின் உடலை எடுக்க விடாமல் போராட்டம் நடத்தினர். அவரது உடலை ஏற்ற வந்த ஆம்புலன்ஸ் வேனையும் முற்றுகையிட்டு சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் முன்னீர்பள்ளம் மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    உடனடியாக சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார், சேரன்மகாதேவி உதவி சூப்பிரண்டு ஆசிஸ் ராவத் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கற்களை எடுத்து வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் கழித்து கொலை செய்யப்பட்ட மாணவர் ராஜா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். பொதுமக்களும் மறியல் போராட்டத்தை கைவிட்டதால், போக்குவரத்து சீரானது.

    கொலையாளிகளை கைது செய்ய முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது கொலைக்கான காரணம் குறித்து ‘திடுக்’ தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:-

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர் இயற்கை மரணம் அடைந்தார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும்போது, ராஜாவும் அவரது நண்பர்களும் பூக்களை வீதியில் வீசி சென்றனர்.

    அப்போது மாற்று சமுதாயத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் பூ விழுந்துள்ளது. அந்த பூக்களை வேண்டும் என்றே வீசியதாக 2 தரப்பினரும் வாய் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ராஜாவுக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டது.

    உடனடியாக இருதரப்பு பெரியவர்களும் பேசி சமரசம் செய்து வைத்தனர். இந்த பிரச்சினை காரணமாக ராஜாவை, மற்றொரு தரப்பினர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், கொலையில் ஈடுபட்டது யார்? யார்? என்று அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக உள்ள 19 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் கொலையில் ஈடுபட்டது யார்? யார்? என்றும், அவர்கள் எங்கு தலைமறைவாக உள்ளனர் என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கொலையாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க வேண்டும் என்றும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ராஜாவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், அந்த பகுதி பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அவர்களுக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த பிரச்சினை காரணமாக முன்னீர்பள்ளம் பகுதியில் இன்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    Next Story
    ×