search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலில் போட்டியிடுவேன், ரஜினி ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது: கமல்ஹாசன் பேட்டி
    X

    தேர்தலில் போட்டியிடுவேன், ரஜினி ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது: கமல்ஹாசன் பேட்டி

    தேர்தலில் போட்டியிடுவேன், ரஜினி ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார். #MNM
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மக்கள் நீதி மய்யம் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா அல்லது தனித்து போட்டியா?

    பதில்:- நல்லவர்கள் வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்று நான் கூறியதில் இருந்தே முக்கால்வாசி பேர் நீக்கப்பட்டு விட்டார்கள். எங்கள் கூட்டணியில் அவர்களுக்கு இடமில்லை என்றுதான் அர்த்தம். நாங்கள் முதலில் சொன்னதில் இருந்து மாறுபடவே இல்லை. எங்கள் கூட்டணி மிக பலமான கூட்டணி. மக்களுடனான கூட்டணி, மக்கள் ஆட்சி வரப்போகும் நேரத்தில் மக்களின் கூட்டணியில் இருப்பதுதான் நியாயம்.

    கே:- அதிமுக, திமுக ஆகியவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறார்கள். உங்களது தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்?

    ப:- நல்ல தேர்தல் அறிக்கையை கொடுப்போம். அதை நாங்கள் படித்துப் பார்க்கும்போது மனசாட்சியை தொட்டு இதை வெளியே படிக்கலாமா? இதில் எத்தனை பொய் இருக்கிறது? எத்தனை சாத்தியம்? இது நிகழ்த்திக் காட்டக்கூடிய வாக்குறுதிகள்தானா? என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் புத்தகமாக தயாராகிக் கொண்டு இருக்கிறது. உங்களிடம் விரைவில் பகிர்ந்து கொள்வோம்.

    கே:- நேர்க்காணல் எப்போது?

    ப:- வருகிற 11,12,13,14,15 ஆகிய தேதிகளில் நேர்க்காணல் நடைபெறும். 1137 மனு வந்திருக்கிறது. அதில் இருந்து நல்லதை தேர்வு செய்வோம். ஒளிவீச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அதற்கான ஏற்பாடுகள் இந்த 5 நாளில் நாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர்களை வைத்து, யார் யார் எங்கெங்கே என்று உங்களுக்கு பெருமையுடன் மார்தட்டி சொல்வோம்.

    கே:- ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை செய்யப்பட வில்லையே?

    ப:- சட்டத்தில் நாம் குறுக்கிட இயலாது. ஆனால் கருணை என்பது வேறு. அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கருணையை காட்ட வேண்டியவர்கள் காட்ட வேண்டும். சட்டம் தன் இயக்கப்படி இயங்க வேண்டும். கருணை என்பது நம் எல்லோருக்கும் உள்ளது.

    நாம் இப்போது 7 பேரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரத்தில் 7½ கோடி பேரின் விடுதலை பற்றியும் பேச வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

    கே:- தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு இடம் பெறுமா?

    ப:- அதைப்பற்றி நான் நிறைய பேசி இருக்கிறேன். பூரண மதுவிலக்கு சாத்தியமா? என்பதற்கு உலக சரித்திரமே சான்றாக நிற்கிறது. ஒரே நாளில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் இப்போது கோட்டையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் முழுமையாக அந்த வியாபாரத்துக்கு போய் விடுவார்கள். அது பெரிய இடைஞ்சலை விளைவிக்கும்.

    படிப்படியாக என்பதுதான் நடக்கக்கூடிய வி‌ஷயம். அரசு ஆணை மட்டும் போதாது. அதற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இது கெட்ட பழக்கம் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு பிறகு எந்த அரசாக இருந்தாலும் வேலை எளிதாகிவிடும்.

    கே:- உங்களின் நெருங்கிய நண்பர் ரஜினி நாடாளுமன்ற தேர்தலிலும், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று கூறி இருக்கிறார். நண்பர் என்ற முறையில் அவரிடம் ஆதரவு கேட்பீர்களா?

    ப:- ஆதரவு கேட்பதைவிட கொடுப்பதுதான் பெரியது. கேட்பது என்பது ஒருவிதமான சங்கோஜத்தை ஏற்படுத்தும். கேட்காமல் கொடுப்பது பெரிய வி‌ஷயம். கேட்காமல் பெறுவதும் பெரிய வி‌ஷயம்.

    கே:- ரஜினி ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறீர்களா?

    ப:- நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

    கே:- 21 தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா?

    ப:- கண்டிப்பாக அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறோம்.

    கே:- நீங்கள் போட்டியிடுவீர்களா?

    ப:- கண்டிப்பாக! எங்கே என்பதை நான் சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    பின்னர் கமல்ஹாசன் தனது அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார். கட்சி செயல்பாடுகளில் பிரச்சனை ஏற்பட்டால் எப்படி தீர்ப்பது என்பது தொடர்பாக  அவர் ஆலோசித்தார். வக்கீல்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    எங்கள் குடும்பத்தில் நிறைய வக்கீல்கள் உள்ளனர். நான் வக்கீலாக வேண்டும் என்று எனது குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். அது நடக்கவில்லை. ஆனால் இன்று அந்த குறையை போக்கும் விதத்தில் எனது கட்சியை சேர்ந்த வக்கீல்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இங்கு இருக்கிறீர்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் 6 பேர் கொண்ட வக்கீல்கள் குழு அமைக்கப்படும். எங்காவது ஓரிரு இடங்களில் பிரச்சனை நடந்தால் ஒரே நேரத்தில் அவற்றை தீர்ப்பதற்காக 6 பேர் குழுவுக்கும் ஒரு துணைக்குழு அமைக்கப்படும்.

    அவர்கள் அந்தந்த தொகுதிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனடியாக சென்று தீர்க்க வேண்டும். நீங்கள் அனைவரும் எப்படி செயல்பட வேண்டும் என்று நமது கட்சி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×