search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தேர்தல் தேதியை மாற்ற ஆய்வு - மதுரை கலெக்டருக்கு உத்தரவு
    X

    தேர்தல் தேதியை மாற்ற ஆய்வு - மதுரை கலெக்டருக்கு உத்தரவு

    மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்ற முடியுமா? என்பது தொடர்பாக 2 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை கலெக்டருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். #Parliamentelection #SatyabrataSahoo
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் நடவடிக்கை நாட்களில்தான் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன.

    ஏப்ரல் 6-ந்தேதி தெலுங்கு புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி மகாவீர் ஜெயந்தி வருகிறது.

    தேர்தலுக்கு மறுநாளான ஏப்ரல் 19-ந்தேதி புனித வெள்ளி தினம் கொண்டாடப்பட உள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் தினத்தன்று மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவு நடக்கும் 18-ந்தேதி சித்திரை திருவிழா தேரோட்டம் நடக்க உள்ளது.

    அடுத்தடுத்து வரும் இத்தகைய தொடர் விழாக்கள் காரணமாக 5 நாட்கள் விடுமுறை வர உள்ளது. ஏப்ரல் 17-ந்தேதி (புதன்கிழமை) மகாவீர் ஜெயந்தி விடுமுறை தினமாகும். மறுநாள் ஓட்டுப்பதிவு, இதற்கு அடுத்த நாள் புனித வெள்ளிக்கு விடுமுறை தினமாகும்.

    அதன் பிறகு சனி, ஞாயிறு வருவதால் மொத்தம் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்க உள்ளனர். எனவே இந்த சமயத்தில் வாக்காளர்கள் பலர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இது வாக்குப்பதிவை கணிசமாக பாதிக்கக்கூடும் என்ற அச்சம் அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் எழுந்துள்ளது.

    குறிப்பாக மதுரையில் நடக்கும் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஓட்டுப்பதிவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு மதுரை சித்திரை விழா ஏப்ரல் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 22-ந்தேதி வரை நடைபெறும் பிரமாண்ட திருவிழாவாகும். இந்த திருவிழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் மதுரை சென்று பங்கேற்பார்கள்.

    குறிப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி மிக சிறப்பாக மதுரையில் நடத்தப்படும். அழகர்கோவிலில் இருந்து புறப்படும் கள்ளழகர் மண்டப சேவைகளை ஏற்றுக் கொண்டு ஏப்ரல் 18-ந்தேதி மதுரைக்குள் வருவார்.

    மதுரை தல்லாகுளத்தில் 18-ந்தேதி கள்ளழகர் எதிர்சேவை நடைபெற உள்ளது. அன்றைய தினம் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    மறுநாள் (19-ந்தேதி) கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். இந்த 2 நாட்களும் மதுரை விழாக்கோலமாக இருக்கும்.

    அன்றைய தினம் (18-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் தென் மாவட்டங்களில் வாக்காளர்கள் தங்கள் பகுதி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை பதிவு செய்வதில் இடையூறு ஏற்படலாம் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம், தமிழ்நாட்டில் தேர்தல் தேதி மாற்றப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்று மாலைமலர் நிருபர் கேட்டார். அதற்கு சத்யபிரத சாகு கூறியதாவது:-

    தேர்தல் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு தேர்வுகள் எப்போது நடைபெறுகிறது. வேறு ஏதேனும் விழாக்கள் மாவட்ட அளவில் வருகிறதா? என்பது பற்றி ஏற்கனவே கருத்து கேட்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியும் (கலெக்டர்) தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அளித்தனர்.

    அந்த வகையில் மதுரையில் சித்திரை திருவிழா 18, 19-ந்தேதிகளில் நடைபெறுவது பற்றி அந்த மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ஏற்கனவே தெரிவித்துள்ளாரா? என்பது பற்றி எங்கள் கவனத்துக்கு இன்னும் வரவில்லை. அதுபற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.

    இதற்கிடையே மதுரை மாவட்ட கலெக்டரிடம் சித்திரை திருவிழா குறித்து கேட்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நடக்கும் ஏப்ரல் 18-ந்தேதி சித்திரை திருவிழாவும் வருவதால் ஓட்டுப்பதிவுக்கு அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டு இருக்கிறோம்.

    2 நாட்களில் மதுரை கலெக்டர் இது தொடர்பாக எங்களுக்கு அறிக்கை தர உள்ளார். அதன் பிறகு இது தொடர்பான வி‌ஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.

    தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கேட்டுக் கொண்டன. மேலும் கோடை காலம் வருவதால் தமிழ்நாட்டில் சீக்கிரமாகவே பாராளுமன்ற தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    இதன் அடிப்படையில் தான் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுத்து தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. எனவே குறிப்பிட்ட ஒரு தொகுதிக்காக தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலை இன்னொரு நாளுக்கு மாற்ற முடியுமா? என்பது தெரியவில்லை.

    கலெக்டர் தரும் அறிக்கையை பொறுத்தே இதுபற்றி இறுதி முடிவு தெரிய வரும்.

    இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #Parliamentelection #SatyabrataSahoo

    Next Story
    ×