search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.வி.-சினிமாவில் மீண்டும் களம் இறங்கும் கமல்
    X

    டி.வி.-சினிமாவில் மீண்டும் களம் இறங்கும் கமல்

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கட்சி செலவுக்காக டி.வி. மற்றும் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார். #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் அவரது கட்சி போட்டியிட்டது.

    19-ந்தேதி நடக்க இருக்கும் 4 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் போட்டியிடுகிறார்.

    அரசியலுக்குள் நுழையும்போதே சினிமாவில் நடிப்பதை விட மாட்டேன் என்று உறுதியாக கூறினார். அரசியல் என்பது தொழில் அல்ல. சினிமா தான் தொழில். வருமானத்துக்காக தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்.

    பின்னர் அரசியலுக்காக நடிப்பை தியாகம் செய்யவும் தயார் என்றும் தற்போது நடிக்க ஒப்புக்கொண்டுள்ள இந்தியன் 2 படமே தனது கடைசி படமாக இருக்கும் என்றும் கூறினார்.

    சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் தேர்தலில் கமல் பிசியானதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கமலுக்காக படக்குழு காத்திருக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக பரபரப்பை ஏற்படுத்திய டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் புதிய பரிமாணத்தில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஓவியா, ஆரவ், ஜூலி, காயத்ரி என்று முதல் சீசன் நிகழ்ச்சி பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதில் ஆரவ் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து சீசன் 2 ஆரம்பித்தது. இந்த முறை கமல் முழு அரசியல்வாதியாகி இருந்தார். எனவே அவரது அரசியல் நக்கல், நையாண்டிகளை நிகழ்ச்சியில் அவர் வரும் பகுதிகளில் பார்க்க முடிந்தது.

    இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யா தத்தா, ஷாரிக், மகத், யாஷிகா ஆனந்த் என இளம் பட்டாளங்களால் கூடுதல் கவர்ச்சியும் கணவன் மனைவியான தாடி பாலாஜி-நித்யாவால் பரபரப்பும் அதிகம் கிடைத்தது. இறுதியில் ரித்விகா டைட்டில் வென்றார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி 2 சீசன்களின் வெற்றிக்கு பிறகு தற்போது பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிவிட்டது. மூன்றாவது சீசனுக்கான புரோமோ படப்பிடிப்பு நேற்று தொடங்கி உள்ளது.

    பூந்தமல்லி தனியார் படப்பிடிப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட பிக்பாஸ் வீட்டை ஒட்டிய செட்டில் கமல்ஹாசன் கலந்து கொண்ட காட்சிகள் நேற்றும் இன்றும் படப்பிடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.


    போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளும் தொடங்கிவிட்டன. அடுத்த சில நாட்களில் புரோமோ வீடியோ சேனலில் ஒளிபரப்பாகலாம் எனத் தெரிகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. எனவே அடுத்த 4 மாதங்களுக்கு கமல் இந்த படப்பிடிப்பில் பிசியாகி விடுவார் என்கிறார்கள்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் அல்லாது கமல் நடிப்பில் தேவர் மகன் படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன. இந்த படத்தை கமல் கட்சியின் துணைத்தலைவரான மகேந்திரன் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இந்தியன் படத்தில் ஊழல், லஞ்சத்தை கையில் எடுத்த கமல்ஹாசன் இதில் சாதி பிரச்சனைகளை கையில் எடுக்கிறார்.

    சாதி பிரச்சனைகள், சாதி அரசியல் ஆகியவை பற்றிய கதையாக உருவாகிறது என்கிறார்கள். இதற்காக பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பு இடங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்கின்றன.

    கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்துவதால் அவரது அரசியல் பணிகள் பாதிக்கப்படுமா? என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை நிர்வாகிகளிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:-

    கமல்ஹாசனின் தொழில் என்பது நடிப்புதான். இதை அவரே பலமுறை கூறியுள்ளார். கட்சி செலவுக்காக தான் அவர் நடிப்பதை தொடர்கிறார். நாங்கள் மற்ற அரசியல் கட்சிகள் போல அல்ல. கமல் தன் சொந்தக் காசை செலவு செய்தும் மக்களிடம் நிதி வாங்கியும்தான் கட்சி நடத்துகிறார். கட்சி தொடங்கி இன்னும் 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

    எனவே, நாங்கள் தொடர்ந்து இதே வேகத்தில் செயல்படத்தான் அவர் நடிக்கிறார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்துகொள்ளும் படப்பிடிப்பு என்பது வார இறுதிகளில் மட்டுமே நடக்கும்.

    இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்தபோதே காலையில் படப்பிடிப்பு, மாலையில் கட்சிப்பணி என்று வேகம் காட்டியவர் அவர். எனவே சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி என்று இறங்கினாலும் கட்சியையோ அரசியலையோ அவர் விட்டுவிட மாட்டார்.

    இந்த தேர்தலில் எங்கள் கட்சி அகில இந்திய அளவில் கவனிக்கப்படும் ஒரு கட்சியாக மாறும். நாங்கள் மக்கள் அளிக்கும் அங்கீகாரத்தை மட்டுமே நம்புகிறோம். நிச்சயம் அது எங்களுக்கு பெரிய அளவில் கிடைக்கும். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் முதல் அமைச்சர் வேட்பாளராக கமல்ஹாசன் இருப்பார் இது உறுதி.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #KamalHaasan
    Next Story
    ×