search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பருத்தி
    X
    பருத்தி

    பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம்

    பெரம்பலூரில் மானிய திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தமிழ்நாடு மானாவாரி வேளாண்மை வளர்ச்சி இயக்கம் 2020-21-ம் ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தாத கிராமங்கள் மற்றும் இத்திட்டத்தில் இணையாத விவசாயிகள் இந்த ஆண்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

    பெரம்பலூர் மாவட்ட மானாவாரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மானாவாரி வேளாண்மை வளர்ச்சி இயக்கம் என்ற திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகள் 100 ஹெக்டர் கொண்ட தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு கோடை உழவு செய்வதற்கு ஹெக்டருக்கு ரூ.1,250 மானியமும், சாகுபடிக்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள், ஊடுபயிர் சாகுபடிக்கான விதைகள் ஆகியன 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். மேலும் தெரிவு செய்யப்பட்ட தொகுப்பில் சிறப்பாக செயல்படும் விவசாயிகள் அடங்கிய குழுவிற்கு விவசாய விளை பொருட்களை மதிப்பு கூட்டுவதற்கான எந்திரங்கள் கொள்முதல் செய்திட ரூ.10 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டம் 15 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் 150 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இத்தொகுப்புகளில் உள்ள மானாவாரி நிலங்களில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் 12,000 ஹெக்டரிலும், பி.டி. பருத்தி 3,000 ஹெக்டரிலும் என மொத்தம் 15,000 ஹெக்டரில் சாகுபடி செய்திடவும் ஊடுபயிராகவும், ஓரப்பயிராகவும் பயறு வகைகளை சாகுபடி செய்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் வட்டாரத்தில் 30 தொகுப்புகளும், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை வட்டாரங்களில் தலா 40 தொகுப்புகளும் மொத்தம் 150 தொகுப்புகளில் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மானாவாரி விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    Next Story
    ×