search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    களாக்காய் சாகுபடியில் அசத்தும் விவசாயி

    களாக்காய் சாகுபடியில் உடுமலை விவசாயி ஆர்வம் காட்டி வருவதுடன் அதிக வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையையடுத்த திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் வேலிப்பயிராக களாக்காய் சாகுபடி செய்து வருவாய் ஈட்டி வருகிறார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    எப்போதோகிடைக்கும் பலாக்காயை விட இப்போது கிடைக்கும் களாக்காய் மேல் என்று சொல்வார்கள்.அந்த வகையில் நிச்சயமாக களாக்காய் மேலானதுதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.பல ஆண்டுகளுக்கு முன் கிராமப்புறங்களில் காட்டுச்செடியாக பல பகுதிகளில் வளர்ந்து கிடந்த   மூலிகை பயிரான களாக்காய் இப்போது காண கிடைப்பதில்லை. 

    தற்போதுள்ள நிலையில் கற்பக விருட்சம் என்றும் சர்வரோக நிவாரணி என்றும் நம் முன்னோர்களால் பாராட்டப்பட்ட களாக்காய் சாகுபடியில் நிச்சயமாக நல்ல வருவாய் ஈட்ட முடியும். தற்போது சோதனை முயற்சியாக சில செடிகளை நட்டு வளர்த்து நல்ல மகசூல் கிடைத்துள்ளது.புதர்ச்செடி போல அடர்த்தியாக முட்களுடன் வளரும் இந்த களாக்காய் செடியை நெருக்கமாக வேலி பயிராக நடவு செய்யும் போது ஆடு,மாடு,வனவிலங்குகள் மட்டுமல்லாமல் மனிதர்களும் அத்துமீறி நமது நிலத்துக்குள் நுழைய முடியாதவாறு வேலியாக அமைந்து விடும்.களாக்காய் செடிகளை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது எளிதான விஷயமாகவே உள்ளது. சந்தையில் கிடைக்கும் களாக்காய் பழங்களை வாங்கி வந்து 2 நாட்கள் வைத்திருந்தால் சற்று அழுகிய நிலைக்கு மாறிவிடும். பின்னர் அவற்றை நன்கு தண் ணீரில் போட்டு பிசைந்து கொட்டைகளை தனியாகப் பிரித்து எடுத்து விடலாம். இந்த விதைகளை சாம்பலுடன் கலந்து வைத்து  கொள்ள வேண்டும்.

    நன்கு கொத்தி பொலபொலப்பாக்கி எரு தூவப்பட்ட மண்ணில் ஒரு அங்குல இடைவெளியில் இந்த விதைகளை விதைக்க வேண்டும். பின்னர் தொடர்ந்து ஒரு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 4 முதல் 5 மாதங்களில் செடிகள் ஓரளவு வளர்ந்ததும் பிடுங்கி நடவு செய்யலாம். மழைக்காலங்களில் நடவு செய்தால் நன்கு செழித்து வளரும். நடவு செய்த 6 மாதங்களுக்கு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரம் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. அதன்பிறகு பெரிய அளவில் பராமரிப்பு தேவையில்லை.
    நடவு செய்த 3 வருடத்தில் காய்க்க  தொடங்கி விடுவதுடன் 25 ஆண்டுகளுக்கு பலன் தரக்கூடியது.இவற்றின் காய்கள் ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் இது மருத்துவ குணங்கள் கொண்டதால் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

    அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பவும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியும். எனவே இதுபோன்ற புதுவிதமான பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கவும், விற்பனை வாய்ப்புகளை உருவாக்கவும் தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
    Next Story
    ×