search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை- கடும் குளிரால் பொதுமக்கள் அவதி

    ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குண்டேரிபள்ளம் அணை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான புளியங்கோம்பை, ஓட்டக்குட்டை, அரியப்பம்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர், பண்ணாரி, திம்பம் மலைப்பகுதிகளில் நேற்று இரவு 8 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது.

    இந்த மழையின் காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.

    பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் பெய்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 297 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இதேபோல் கொடுமுடி, பெருந்துறை, ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம், நம்பியூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவில் பலத்த மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியது. பொதுமக்கள் அவதி அடைந்தனர். இன்று காலையும் பல்வேறு இடங்களில் மழை தூறிக்கொண்டு இருந்தது.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகத்துக்கு செல்லும் பொதுமக்கள் குடை பிடித்தபடி வந்து சென்றனர். மேலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. ஆனாலும் ஈரோடு நகர் பகுதிகளில் காலை முதலே குடைபிடித்து கொண்டு தீபாவளி ஜவுளி எடுக்க பொதுமக்கள் அதிகளவில் வந்து இருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குண்டேரிபள்ளம் அணை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-10, கொடுமுடி- 22.2, பெருந்துறை-17.2, பவானி-7.4, கோபி-5.6, சத்தி-6, பவானிசாகர்-5.2, தாளவாடி-1, நம்பியூர்-11, சென்னிமலை-6, மொடக்குறிச்சி-13, கவுந்தப்பாடி-6.2, எலந்தகுட்டைமேடு-6.4, அம்மாபேட்டை-4.4, கொடிவேரி-7.2, குண்டேரிபள்ளம்-2.2, வரட்டுப்பள்ளம்-3.4.
    Next Story
    ×