search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நலத்திட்டம் வழங்கிய மு.க. ஸ்டாலின், நடிகர் சூர்யா
    X
    நலத்திட்டம் வழங்கிய மு.க. ஸ்டாலின், நடிகர் சூர்யா

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு ரூ. 4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நரிக்குறவர்கள், இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நலவாரிய அட்டை உள்ளிட்டவைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண் பாசி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார். விழா மேடையில் பேசிய அஸ்வினி, தனது சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு அடையாள அட்டை, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட உதவிகளை செய்து ஆதரவளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். விழா முடிந்ததும் அஸ்வினி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்து கலந்துரையாடினார்.

    நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்த செய்திகளை படத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    நலத்திட்டம் வழங்கிய மு.க. ஸ்டாலின்

    மு.க. ஸ்டாலின் டுவிட்டர் செய்தியை ரீ-டுவீட் செய்துள்ள நடிகர் சூர்யா, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய  நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற  நம்பிக்கையை அளித்துள்ளது…

    நலத்திட்டம் வழங்கிய மு.க. ஸ்டாலின்

    மேலும் எளியமக்களின் தேவை அறிந்து உடன் செயலில் இறங்கிய வேகம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இந்த தீபாவளி திருநாளை மறக்கமுடியாத நன்னாளாக மாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.’’ எனப் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×