search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்
    X
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக உயர்வு

    கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படியும், நீர்வரத்து அதிகரிப்பாலும், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை நீடித்து வருகிறது.
    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக- கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 10 ஆயிரத்து கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் கொட்டியது.

    அதிகரித்து வரும் நீர்வரத்தை காவிரியின் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பிலிகுன்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையொட்டி தொடர் விடுமுறை காரணமாக ஒகேனக்கல்லுக்கு கர்நாடக மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைப்படியும், நீர்வரத்து அதிகரிப்பாலும், ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள தடை நீடித்து வருகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சிலர் காவிரி ஆற்றங்கரையோரம் போலீசார் பாதுகாப்பையும் மீறி குளித்து சென்றனர்.

    குளிக்க தடை நீடிப்பால் சுற்றுலா பயணிகள் கோத்திக்கல் பரிசல் துறையில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசலில் பயணம் சவாரி செய்து காவிரி அழகை கண்டு மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் அதிகரிப்பால் கடைவீதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மீன்கடைகளில் மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

    Next Story
    ×