search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அமராவதி-உப்பாறு கால்வாய் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

    அமராவதி அணையிலிருந்து கடந்த ஜுலை 23-ம் தேதி முதல் 3 மாதத்துக்கு மேலாக உபரியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வறண்ட பிரதேசமாக தாராபுரம் வட்டம் உள்ளது. இந்த வட்டத்தின் ஒருபகுதி பாசன வசதி பெற உப்பாறு அணை பி.ஏ.பி. திட்டத்தில் ஊட்டு நீர் பெறும் அணையாக ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்டது. பி.ஏ.பி. திட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நான்கே கால்  லட்சமாக பாசன பரப்பு விரிவடைந்த பின்னர் பி.ஏ.பி. பாசன பகுதிக்கே பற்றாக்குறையாக போனது.

    ஆகவே உப்பாறு அணைக்கு தண்ணீர் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் கடந்த 50 அண்டுகளில் 42 ஆண்டுகள் அமராவதி அணை பருவமழை காலங்களில் அணை நிரம்பி உபரிநீராக ஆற்றில் செல்கிறது.

    உபரியாக செல்லும் நீரை பயன்படுத்தி உப்பாறு அணைக்குக் கொண்டுசென்று அங்கிருந்து வட்டமலைக் கரை அணைக்கு கொண்டு செல்லலாம் என கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.18 கோடிக்கு போடப்பட்ட திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

    தற்போது அமராவதி அணையிலிருந்து கடந்த ஜுலை 23-ம் தேதி முதல் 3 மாதத்துக்கு மேலாக உபரியாக நீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. நவம்பர் 1-ம் தேதி முதல் வினாடிக்கு 2000 கனஅடி நீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது.

    இதில் ஒரு டிஎம்சி நீர் இருந்தால் கூட உப்பாறு அணையும், வட்டமலைகரை அணையும் நிரப்ப முடியும் என்பதால் அமராவதிஆறு-உப்பாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற  வேண்டும்.  அணை இருந்தும் வறண்ட பகுதியாக தவித்து வரும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம், காங்கயம் வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று விவசாய பணிகளில் ஈடுபட இயலும்.

    ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அமராவதி ஆற்றின் வெள்ள உபரிநீரைக் கொண்டு உப்பாறு அணை மற்றும் வட்டமலைக்கரை ஓடை அணைகளை நிரப்ப அமராவதி-உப்பாறு கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
    Next Story
    ×