search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏரி
    X
    ஏரி

    மதுராந்தகம் ஏரி நிரம்பியதால் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் கிளியாற்றில் வெளியேறுகிறது

    கிளி ஆற்றின் கரையோரம் உள்ள வளர்பிறை, முள்ளி, தோட்ட நாவல், ஈசூர், விழுதமங்கலம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரியது மதுராந்தகம் ஏரி. இதன் மொத்த உயரம் 23.3 அடி. தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி ஏரியில் 24 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதன் முழு கொள்ளளவான 694 மில்லியன் கனஅடி நீரை தாண்டி 720 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

    ஏரிக்கு 2000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து ஏரியில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் உபரி நீராக தானியங்கி ‌ஷட்டிர் மற்றும் கலங்கள் வழியாக கிளி ஆற்றில் வெளியேறி வருகிறது.

    இதனால் கிளி ஆற்றின் கரையோரம் உள்ள வளர்பிறை, முள்ளி, தோட்ட நாவல், ஈசூர், விழுதமங்கலம் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஏரியை பார்வையிட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. உபரி நீர் வெளியேறும் கிளி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிக்கவோ, மீன் பிடிக்கவும் செல்லக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவுபடி ஏரிக்கரையின் ஆரம்பப்பகுதியில் தற்காலிக மையம் அமைக்கப்பட்டு மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நீர்வள ஆதார துறை பொதுப்பணித் துறையின் செயற்பொறியாளர் நீல் முடியோன், இளநிலை பொறியாளர் குமார் பொதுப்பணித்துறையினர் ஏரியின் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ‌ஷட்டரை திறப்பதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    மதுராந்தகம் வட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 78 ஏரிகளில் அருங்குணம் சிறுகளத்தூர், மாமண்டூர், கிண்டிசேரி உள்ளிட்ட 35 ஏரிகள் முழுவதும் நிரம்பி உள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×