search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    தமிழகம் முழுவதும் மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம்- கே.எஸ்.அழகிரி

    தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலந்தூரில் ஏற்பாடு செய்திருக்கிற நிகழ்ச்சியில் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. ஆட்சி மத்தியில் அமைந்து கடந்த 7 ஆண்டுகளாக தவறான பொருளாதார கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

    கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இருமடங்கு உயர்ந்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் 300 ரூபாய் உயர்ந்துள்ளது.

    எரிபொருட்களின் விலையை உயர்த்தி சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைத்துள்ளது. இதனால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி


    இதைப் பற்றி
    பிரதமர் மோடி கவலைப்பட்டதாக தெரியவில்லை. கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை சொத்துகளை நீண்டகால குத்தகையின் அடிப்படையில் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கு தாரை வார்க்க முயற்சி நடைபெறுகிறது. கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

    மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

    சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனையின்படி நடைபெறும் இப்பிரச்சாரப் பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கதர் குல்லா அணிந்து, கையில் மூவர்ணக் கொடியையும், கண்டன பதாகைகளையும் தாங்கிக் கொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியின் அவலங்களை பட்டியலிட்டு தயாரிக்கப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தை பொது மக்களிடையே காங்கிரஸ் கட்சியினர் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்களிடையே கருத்துகளை திரட்டுவதே இந்த அறப்போராட்டத்தின் நோக்கமாகும்.

    தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலந்தூரில் ஏற்பாடு செய்திருக்கிற நிகழ்ச்சியில் நான் (கே.எஸ்.அழகிரி) பங்கேற்க உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    Next Story
    ×