search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தலைகீழாக சரிந்தது- 38 மாவட்டங்களும் இயல்பு நிலைக்கு மாறியது

    தேர்தல் பிரசாரம் கடந்த 10 நாட்களாக களைகட்டி இருந்தபோதிலும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்காமல் குறைந்து இருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. மாநிலம் முழுவதும் கடந்த 1-ந்தேதி அன்று 1,489 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அன்று சென்னையில் 682 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

    இந்த பாதிப்பு எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் வேகமாக உயர்ந்தது. அந்த வகையில் ஒரே வாரத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

    கடந்த மாதம் (ஜனவரி) 8-ந்தேதியன்று 38 மாவட்டங்களிலும் மொத்தமாக 10,978 பேர் பாதிப்புக்குள்ளாகி இருந்தார்கள். சென்னையில் 5,098 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது.

    இந்த பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் கடந்த மாதம் 20-ந் தேதியன்று 28,561 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். சென்னையிலும் தினசரி பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கி காணப்பட்டது.

    ஆனால் கடந்த மாதம் இறுதியில் இருந்தே கொரோனா தொற்று குறையத்தொடங்கியது. ஒவ்வொரு நாளும் நோயின் தாக்கம் அதிகரிக்காமல் குறைந்துகொண்டே சென்றது. இதனால் கடந்த மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்கு குறைந்தது.

    தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் நோயின் தாக்கம் எதிர்பாராத அளவுக்கு குறைந்துள்ளது.

    கொரோனா தினசரி பாதிப்பு 1,500-க்கும் கீழ் நேற்று பதிவாகி உள்ளது. நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி 1,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 1-ந்தேதி 1,489 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.

    இதன் பிறகு தொடர்ச்சியாக அதிகரித்த தினசரி பாதிப்பு 1½ மாதத்துக்கு பிறகு 1,500-க்கும் கீழ் சரிந்துள்ளது.

    சென்னையில் நேற்று 303 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 231 பேரும், செங்கல்பட்டில் 113 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே 3 இலக்க எண்களில் நோய் தொற்று பதிவாகி இருக்கிறது.

    மற்ற பெரும்பாலான மாவட்டங்களில் இரட்டை இலக்க எண்ணிலேயே நோய் தொற்று பதிவாகி உள்ளது.

    ஈரோட்டில் 82 பேரும், திருப்பூரில் 69 பேரும், காஞ்சிபுரத்தில் 40 பேரும், கன்னியாகுமரியில் 32 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். சேலத்தில் 56 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்படி 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது.

    ஒருசில மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்திலேயே நோய் தொற்று பதிவாகி உள்ளது. திண்டுக்கல், கள்ளக்குறிச்சியில் தலா 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 4 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

    தென்காசி, தேனியில் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெரம்பலூரில் நேற்று ஒருவருக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    தேர்தல் பிரசாரம் கடந்த 10 நாட்களாக களைகட்டி இருந்தபோதிலும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்காமல் குறைந்து இருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    இருப்பினும் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் நாளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    Next Story
    ×