search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்றார்
    X
    சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்றார்

    சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பதவி ஏற்றார்

    மேயராக தேர்வு செய்யப்பட்ட பிரியாவை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மேயரின் சிம்மாசனத்திற்கு அழைத்து வந்து அமர வைத்தார்.
    சென்னை:

     தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2-ந்தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

    இதையடுத்து 21 மாநகராட்சிகளிலும் மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது. இதற்காக சென்னை, தாம்பரம், ஆவடி, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், கரூர், ஓசூர், திண்டுக்கல், சிவகாசி, நாகர்கோவில் ஆகிய மாநக ராட்சிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வைத்து புதிய மேயர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக வட சென்னை பகுதியை சேர்ந்த திரு.வி.க. நகர் மண்டலத்துக்குட்பட்ட 74-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான பிரியா அறிவிக்கப்பட்டு இருந்தார்.

    மேயர் தேர்தலையொட்டி சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி இன்று காலை மாநகராட்சி கூட்டத்தை கூட்டியிருந்தார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை மாநகராட்சி புதிய கவுன் சிலர்கள் வருகை தந்திருந்தனர். இவர்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் மாநகராட்சி கட்டிட நுழைவு வாயில் அருகில் ஒன்றாக கூடி இருந்தனர்.

    காலை 9.15 மணி அளவில் மேயர் வேட்பாளரான பிரியா காரில் வந்து இறங்கினார். மஞ்சள் நிறத்தில் அவர் புடவை அணிந்திருந்தார். பிரியா காரில் இருந்து இறங்கியதும் அங்கு கூடி இருந்த கவுன்சிலர்கள் வணக்கம் தெரிவித்து அவரை வரவேற்றனர்.

    அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோருன் பதவியேற்பு விழாவுக்காக வந்திருந்தனர். அவர்கள் இருவரும் பிரியாவை வரவேற்று 2-வது மாடியில் உள்ள கூட்ட அரங்குக்கு லிப்ட் மூலம் அழைத்து சென்றனர்.

    மேயர்


    காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி, தேர்தல் நடைமுறைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தல் தொடங்குகிறது.

    மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று கமி‌ஷனர் ககன்தீப் சிங்பேடி அறிவித்தார். இதையடுத்து பிரியா தனது வேட்பு மனுவை கமி‌ஷனரிடம் வழங்கினார்.

    இவரை தவிர வேறு யாரும் மேயர் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் ஒருமனதாக சென்னை மாநகராட்சி மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து மேயராக பிரியா முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். பின்னர் அங்கிருந்த பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார். இதன்பிறகு மேயர்கள் அணியும் சிவப்பு நிற அங்கியை எடுத்து வந்தனர். அதனை கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி, மேயர் பிரியாவிடம் வழங்கினார்.

    அதனுடன் 105 பவுன் தங்க சங்கிலி மற்றும் பதக்கம் ஒன்றையும் கமி‌ஷனர் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட பிரியா மேயர் அங்கியை அணிவதற்காக கூட்ட அரங்கில் இருந்து சென்றார்.

    சிறிதுநேரத்தில் மேயருக்கான அங்கியை அணிந்து கொண்டு பிரியா கூட்ட அரங்கிற்குள் நுழைந்தார். அவரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு இருவரும் அழைத்துச் சென்று மேயர் இருக்கையில் அமர வைத்தனர்.

     அப்போது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இதையடுத்து மேயருக்கான செங்கோலை அமைச்சர்கள் இருவரும் பிரியாவிடம் வழங்கினர். பின்னர் தனித்தனியாக பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி பூங்கொத்து கொடுத்து மேயர் பிரியாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் சுதர்சனம், மயிலை வேலு, தாயகம் கவி ஆகியோரும் மேயர் பிரியா வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியா மிகுந்த மகிழ்ச்சிபெருக்குடன் காணப்பட்டார். பதவியேற்கும் போது சிரித்த முகத்துடன் காட்சி அளித்த அவர் வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    பதவி ஏற்பு விழா முடிவடைந்ததும் மேயருக்காக ஒதுக்கப்பட்டுள்ள அறைக்கு பிரியாவை அமைச்சர் சேகர்பாபு அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்தார்.

    மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பிரியாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு விழா அரை மணிநேரத்தில் முடிவடைந்தது.

    பட்டியலினத்தை சேர்ந்த பிரியா சென்னை மாநகராட்சி மேயராக மிகப் பெரிய பொறுப்பில் அமர வைக்கப்பட்டுள்ளார்.

    மேயராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியா முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவத்தின் மருமகள் ஆவார். செங்கை சிவம் வடசென்னையில் தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்தவர். இவரது மகன் ராஜன் தி.மு.க.வில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகள் தான் பிரியா.

    எம்.காம் பட்டதாரியான பிரியா தனது தாத்தா மற்றும் தந்தை வழியில் அரசியல் பயணத்தை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறார்.

    இன்று பொறுப்பேற்றுக் கொண்ட மாநகராட்சி மேயர்களிலேயே பிரியா தான் இளம் வயதுக்காரர் ஆவார். 28 வயதாகும் பிரியா எம்.காம் முடித்துள்ளார். இவரது கணவர் ராஜா தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்ற போதிலும் பிரியா மற்ற பெண்களை போல ஆசிரியர் கனவுடனேயே வாழ்ந்து வந்தவர். இந்த நிலையில் தான் அவரை மேயர் பொறுப்பில் அமர வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழகு பார்த்திருப்பதுடன் பட்டியல் இனத்தவர்களுக்கும் பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×