search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம்
    X
    கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகம்

    தமிழக பட்ஜெட்: 19 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் ரூ.1,019 கோடியில் தரம் உயர்த்தப்படும்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தற்போது 500 படுக்கை வசதிகளுடன் 120 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
    சென்னை:

    தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:

    தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில் வழங்குவதற்காகவும், முக்கிய திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தவும் 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக மேம் படுத்திட அரசு முடிவு செய்துள்ளது.

    புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

    உலகளாவிய நோய்த் தாக்க ஆய்வின்படி மன அழுத்தம், பதற்றம், மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மன நல மருத்துவப் பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மன நோய் சிகிச்சை கட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது.

    இத்தகைய உயர்தர மனநல சேவைகளை வழங்குவதற்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முதல்கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் தற்போது 500 படுக்கை வசதிகளுடன் 120 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    இம்மருத்துவமனை, 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும் தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசிய சுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×