search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் ஐ பெரியசாமி
    X
    அமைச்சர் ஐ பெரியசாமி

    கூட்டுறவுத்துறை மோசடியை விசாரிக்க தனி சிறப்பு கோர்ட்டு- அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

    கூட்டுறவுத் துறையில் நடந்த முறைகேடுகள், மோசடிகள் குறித்து விசாரிக்க விரைவில் தனி சிறப்பு கோர்ட்டு அமைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜு பேசினார். அவர் கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களான தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

    கொரோனா காலத்தில் தர்மசாலைகளாக விளங்கிய அம்மா உணவகத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அம்மா மினி கிளினிக்கை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

    அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறுக்கிட்டு பேசினார். அவர் கூறும்போது, “எங்கள் ஆட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதுவரை 60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்” என்றார்.

    அதன் பின்னர் பேசிய செல்லூர் ராஜு, “மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதற்கு மக்கள் நலப்பணியாளர்கள்தான் வீடு வீடாக செல்கின்றனர்” என்று கூறினார்.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மக்கள் நலப் பணியாளர்களைத்தான் நீங்கள் நீக்கி விட்டீர்களே. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7488 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.

    இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    இதனை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். அவர் பேசியதாவது:-

    உறுப்பினர் செல்லூர் ராஜு இங்கு ஒரு எம்.ஜி.ஆர். பாடலை பாடினார். நானும் எம்.ஜி.ஆர். பாடிய ஒரு பாடலை இப்போது பாடுகிறேன். “ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்” என்று எம்.ஜி.ஆர். பாடி இருக்கிறார்.

    உங்களது ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 780 சங்கங்களில் ரூ.482 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. ஒரே ஒரு நபர் மட்டும் தனது மனைவியின் பெயரில் ரூ.14 கோடி அளவுக்கு கடன் பெற்று இருக்கிறார். அது அமைச்சருக்கு தெரியாமல் எப்படி நடந்து இருக்கும்.

    மதுரை மாவட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. அதே போல அனைத்து மாவட்டங்களிலும் நடந்த முறைகேடு தொடர்பான பட்டியலும் உள்ளது.

    எனவே கூட்டுறவுத் துறையில் நடந்த முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்து விசாரிக்க விரைவில் முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து தனி சிறப்பு கோர்ட்டு அமைப்பது பற்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவர் கூறும்போது, “கூட்டுறவுத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அந்த புகாரிகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு, “யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள்” என்று தெரிவித்தார். தொடர்ந்து விவாதம் நடந்தது.



    Next Story
    ×