search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்?- ஆகஸ்டில் தேர்வு செய்யப்படுகிறார்

    புதிய தலைவர் பதவியை பிடிக்க இப்போதே கட்சிக்குள் பலரிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதிமணி எம்.பி. ஆகியோர் இடையே போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 10-ந்தேதி தொடங்குகிறது.

    தமிழ்நாட்டில் தேர்தலை நடத்துவது, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில தேர்தல் அதிகாரி கவுராய் கோசாய், துணை தேர்தல் அதிகாரிகள் நெய்யாற்றின் கரை சனல், அஞ்சலி நிம்யில்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது பற்றி ஆலோசித்தனர். இதுவரை சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

    முதற்கட்டமாக வட்டார அளவிலான தேர்தலும் அதை தொடர்ந்து மாவட்ட பிரதிநிதி, மாவட்ட தலைவர்கள், மாவட்ட பிரதிவாதிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

    பின்னர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கான தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அகில இந்திய தலைமையை தேர்வு செய்வார்கள்.

    அதற்கு முன்னதாக மாநில தலைவர் தேர்தல் நடைபெற வேண்டும். புதிய மாநில தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய தலைவர் பதவிக்காலம் 3 ஆண்டுகள் முடிந்து விட்டது. எனவே புதிய தலைவரும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    புதிய தலைவர் பதவியை பிடிக்க இப்போதே கட்சிக்குள் பலரிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் எம்.பி., ஜோதிமணி எம்.பி. ஆகியோர் இடையே போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று முதல் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் சிந்தனையாளர்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வபெருந்தகை மற்றும் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×