search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டு கொழுப்புக்குள் பதுக்கி வைத்த 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
    X

    மாட்டு கொழுப்புக்குள் பதுக்கி வைத்த 29 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

    • புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் நாட்டு வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் வருவதை பார்த்ததும் 2 பேர் தப்பியோட முயன்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காடுவெட்டி பகுதியில் பெரியகுளம் அரண்மனைக்கு சொந்தமான புளியந்தோப்பு உள்ளது. இந்த பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மாட்டுக் கொழுப்புக்குள் நாட்டு வெடிகுண்டுகளை உள்ளே வைத்து பல இடங்களில் வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை பார்த்த அப்பகுதி விவசாயிகள் கிராம காவல் தலைவருக்கு புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கிராம காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது விலங்குகளை வேட்டையாடுவதற்காக புளியந்தோப்பு பகுதியில் பல இடங்களில் நாட்டு வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அங்கு யாரேனும் உள்ளார்களா என்று விசாரணை மேற்கொண்டனர். போலீசார் வருவதை பார்த்ததும் 2 பேர் தப்பியோட முயன்றனர். இருந்தபோதும் துரத்திச் சென்று போலீசார் அவர்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் சிக்கினார். பிடிபட்டவர் பெரியகுளம் அருகே உள்ள ஏ. வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 30 ) என்பதும், தப்பி ஓடிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 36) என்பதும் தெரியவந்தது.


    வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்துவிட்டு தப்பி ஓட முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து பிடிபட்ட நபரை வைத்து புளியந்தோப்பு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட 29 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகுளம் வடகரை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 29 நாட்டு வெடிகுண்டுகளையும் செயலிழக்க வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வரும் போலீசார் இவர்கள் வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயன்றார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×