search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டாவில் 3 இடங்களில் நிலக்கரி எடுக்க திட்டம்: 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் அழியும் அபாயம்
    X

    டெல்டாவில் 3 இடங்களில் நிலக்கரி எடுக்க திட்டம்: 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் அழியும் அபாயம்

    • நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
    • நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி மற்றும் அதன் துணைப்பொருட்கள் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது.

    ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களில் இருந்து மீண்டு வந்த டெல்டா மாவட்டத்திற்கு தற்போது எமனாக நிலக்கரி எடுக்கும் திட்டம் வந்துள்ளது.

    அப்பகுதிகளில் நிலக்கரியை தோண்டி எடுப்பதற்கு விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் டெண்டரும் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29-ந்தேதி வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டின் மூன்று இடங்களில் நிலக்கரி எடுக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

    அவை திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி பழுப்பு நிலக்கரி திட்டம், கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 2 பழுப்பு நிலக்கரி திட்டங்கள் ஆகும்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டம் வடசேரி முதல் கடலூர் மாவட்டம் புவனகிரி வரை இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. ஜெயங்கொண்டத்தில் இருந்து புதுச்சேரி வரை விவசாய நிலங்கள் அதன் தன்மையை இழந்து மலட்டுத்தன்மைக்கு சென்றுவிடும் அபாயம் உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி, திருவாரூர் மாவட்டம் உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டது.

    இந்த அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சிடைந்தனர். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் சூழ்நிலையில் எப்படி நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு டெண்டர் விடலாம் என விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உடையார்பாளையம் தாலுகா தா.பழூர் அருகே உள்ள மைக்கேல்பட்டி நிலக்கரி படுகையில் பருக்கல் ஊராட்சியை சேர்ந்த பருக்கல், அழிசுகுடி, வாத்திகுடிகாடு ஆகிய கிராமங்களில் முதல் கட்டமாக 14.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலக்கரி எடுப்பதற்கு திட்டமிடப்பட்டு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் மற்றும் தா.பழூர் வட்டார பகுதிகள் டெல்டா பாசன பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இங்கு பிரதான விவசாயமாக நெல், கரும்பு, நிலக்கடலை, முருங்கை, மக்காச்சோளம், எள், உளுந்து, பருத்தி, பணப்பயிரான முந்திரி சாகுபடி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

    இவை தவிர மலர் சாகுபடி, காய்கறிகள் உற்பத்தி உள்ளிட்ட விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறை சாகுபடிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்த தகவல் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனை எதிர்த்து போராடவும் விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். மேலும் இந்த நிலக்கரி எடுக்கும் திட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இதுகுறித்து மைக்கேல் பட்டியை சேர்ந்த விவசாயி மத்தேயு கூறுகையில், அரியலூர் மாவட்டம் டெல்டா பாசன பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. எனவே தீவிரமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் எங்கள் பகுதியில் மத்திய அரசு எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யக்கூடாது.

    ஒருவேளை அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தீவிரம் காட்டினால் நாங்கள் இப்பகுதி விவசாயிகளை ஒன்று திரட்டி தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

    அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், மத்திய அரசு மின்சார தட்டுப்பாட்டை காரணம் காட்டி நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த டெல்டாவை அழிக்கும் முயற்சியாகும்.

    வளம் கொழிக்கும் பூமியான டெல்டாவில் நிலக்கரி எடுத்தால் சுமார் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அழிந்துவிடும். அதனை நம்பி வாழ்வாதாரமாக கொண்ட கோடிக்கணக்கான மக்கள் சொந்த ஊரிலிருந்து அகதிகளாக வெளியேற்றப்படுவார்கள். அதுமட்டுமின்றி நிலக்கரி எடுக்கும் பகுதிகளை சுற்றிலும் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு விளைநிலங்கள் அதன் தன்மையை இழந்துவிடும். இந்த நிலக்கரி திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டத்திற்கு நாங்கள் தயாராகி வருகிறோம் என்றார்.

    காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறுகையில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் என்னென்ன தரத்தில் நிலக்கரி இருக்கிறது என ஆய்வு செய்வது என்பதே நிலக்கரி எடுப்பதற்கான முன்னேற்பாடுதான்.

    நிலக்கரி திட்டத்திற்கு அனுமதி கொடுத்தால் டெல்டா மாவட்டங்களில் முற்றிலும் விவசாயம் அழிந்து விடும். வேளாண் பூமியான டெல்டா பகுதி கனிமவள சுரங்கங்களின் பாதாள பூமியாக மாறிவிடும். எனவே டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி தொடர்பாக ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    இருந்தாலும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒருபோதும் டெல்டாவில் நிலக்கரி எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×