search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
    X

    இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த சிறுவர்கள் உள்பட 8 பேர்.

    இலங்கையில் இருந்து 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வந்தது.
    • இலங்கையில் தற்போது வரை பொருளாதார நிலைமை சீராகவில்லை.

    ராமேசுவரம்:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வந்தது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில்களும் பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து போதிய வருமானமின்றி தவிக்கின்றனர்.

    பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நாளிலிருந்து வாழ்வாதாத்தை தேடி இலங்கை தமிழர்கள் கடல் வழியாக ஆபத்தான பயணம் மேற்கொண்டு தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சம் அடைவது அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடி அருகே உள்ள அரிசல்முனை கடல் பகுதியில் உள்ள மணல் திட்டில் 5 சிறுவர்கள் உள்பட 8 பேர் இலங்கையில் இருந்து வந்திருப்பதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த இந்துமதி (வயது 65), சசிக்குமார் (30) இவரது மகன் மோகித் (7), சுபிஸ்கா (9), யாழ்பாணத்தை சேர்ந்த வசந்தகுமார் மனைவி ஜெயந்தினி (30), இவரது மகள் இனியா (10), மகன்கள் ஹரிஹரன் (9), தனுசன் (4) என தெரிய வந்தது.

    8 பேரையும் கடலோர காவல் படையினர் மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

    முன்னதாக அவர்கள் கூறுகையில், இலங்கையில் தற்போது வரை பொருளாதார நிலைமை சீராகவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அங்கு பிழைப்பதற்கு வழியில்லாததால் தலா ரூ.1 லட்சம் கொடுத்து கள்ளத்தோணி மூலம் தலைமன்னாரில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு இன்று அதிகாலை தனுஷ்கோடி வந்தோம் என்று தெரிவித்தனர்.


    Next Story
    ×