search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எமரால்டு போலீஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் கரடி புகுந்ததால் பரபரப்பு
    X

    எமரால்டு போலீஸ் நிலையத்திற்குள் நள்ளிரவில் கரடி புகுந்ததால் பரபரப்பு

    • போலீசார் ரோந்து சென்று இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.
    • சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்திற்குள் கரடி புகுந்து அட்டகாசம் செய்தது. பின்னர் கூண்டு வைத்து கரடி பிடிக்கப்பட்டு, மாவனல்லா வனப்பகுதியில் விடப்பட்டது. இந்தநிலையில் தற்போது கரடி ஒன்று எமரால்டு பகுதியில் நடமாடி வருகிறது. கடந்த 3-ந் தேதி நள்ளிரவில் எமரால்டு பகுதியில் சுற்றித்திரிந்த கரடி போலீஸ் நிலையம் அருகே வந்தது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர், கரடியை பார்த்து காரை நிறுத்தினார். பின்னர் கரடி உடனடியாக எமரால்டு போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது. போலீஸ் நிலைய வளாகத்தில் கரடி சுற்றித்திரிந்தது. போலீசார் ரோந்து சென்று இருந்ததால், அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டி போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, கரடி போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது தெரிய வந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீஸ் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இரவு நேரங்களில் கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டாம். கதவு, ஜன்னல்கள் பூட்டப்பட்டு இருப்பினும், கதவை தட்டும் சத்தம் கேட்டாலும் யார் என விசாரித்து விட்டு கதவை திறக்க வேண்டும். உடனடியாக கதவை திறக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் கோத்தகிரி அருகே கடைவீதியில் குடியிருப்பு அதிகமுள்ள பகுதியில் நள்ளிரவில் கரடி உலா வந்தது. இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சமடைந்து உள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×