search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி அருகே வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!
    X

    ஊட்டி அருகே வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

    • குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
    • குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்வது அதிகரித்துள்ளது.

    சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

    ஊட்டி அருகே கல்லக்கொரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது.

    குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, வீட்டின் வளாகத்தில் சிறிது நேரம் சுற்றி வந்தது.

    பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு தாவிய சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை தனது வாயில் கவ்வி கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி வெளியே சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

    இதற்கிடையே இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியாகினர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளது.

    எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×