search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் டிபன் கடை உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர்
    X

    கோவையில் டிபன் கடை உரிமையாளரிடம் ரூ.70 ஆயிரம் அபேஸ் செய்த வாலிபர்

    • ஏ.டி.எம் கார்டை எடுத்து தருவதாகக் கூறி ஜான் சேவியரை வாலிபர் ஏமாற்றியுள்ளார்.
    • ஜான் சேவியர் ராமநாதபுரம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ரெட்பீல்டு ரோட்டை சேர்ந்தவர் ஜான் சேவியர்(வயது52). டிபன் கடை உரிமையாளர்.

    சம்பவத்தன்று இவர் புலியகுளம் தாமு நகர் பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அங்கு அவர் 3 கட்டங்களாக ரூ.14 ஆயிரம் எடுத்தார். அப்போது திடீரென அவரது ஏ.டி.எம்., கார்டு எந்திரத்தில் சிக்கி கொண்டது. ஜான் சேவியர் எவ்வளவு முயற்சி செய்து எடுக்க முடியவில்லை. இதனை வெளியில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் பார்த்தார்.

    பின்னர் அவரே ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து என்னவென்று விசாரித்தபோது, ஜான்சேவியரும் நடந்ததை தெரிவித்தார். உடனே அந்த வாலிபர், தான் உங்களுக்கு உதவுகிறேன் எனவும், அதற்கு நீங்கள் உங்கள் ரகசிய எண்ணை தெரிவித்தால் உங்களின் ஏ.டி.எம். கார்டை எடுத்து தருகிறேன் என்றார்.

    ஜான் சேவியரும் கார்டை எடுத்து தருகிறார் என்பதால், அந்த வாலிபரிடம் ரகசிய எண்ணை தெரிவித்து விட்டார். ரகசிய எண்ணை பெற்று கொண்டு வாலிபர் உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் வெளியே வந்த வாலிபர், கார்டை எடுத்து விட்டதாக கூறி ஜான் சேவியரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்தார்.

    இதனை உண்மை என நினைத்து அந்த கார்டை வாங்கி கொண்டு ஜான் சேவியர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் ஜான் சேவியருக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ரூ.70 ஆயிரம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு இருப்பதாக வந்த தகவலை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

    உடனே ஜான் சேவியர் வங்கி கிளைக்கு சென்று விசாரித்தார். அவர்களும் உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

    கார்டு தன்னிடம் இருக்கும்போது எப்படி பணம் எடுக்க முடியும் என யோசித்தார். அப்போது தான் அவருக்கு அந்த வாலிபரின் நியாபகம் வந்தது. அந்த வாலிபர் தனக்கு உதவுவது போல் நடித்து, தனது ஏ.டி.எம். கார்டை அவர் எடுத்து கொண்டு, வேறொரு கார்டை தன்னிடம் கொடுத்ததும், தனது ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து ரூ. 70 ஆயிரத்தை எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜான் சேவியர் ராமநாதபுரம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்

    Next Story
    ×