search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் பழைய இரும்பு குடோனில்  தீ விபத்து
    X

    தூத்துக்குடியில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து

    • குடோனில் சில பகுதி முழுவதும் தீக்கிரையாகின.
    • தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஜெயலாணி தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 50). இவர் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவரது குடோன் செல்சீனி காலனி பகுதியில் உள்ளது.

    இன்று காலை அவரது குடோன் அருகே உள்ள முட்புதரில் சிலர் தீவைத்து எரித்துள்ளனர். அப்போது பலத்த காற்று வீசியதால் முட்புதரில் வைக்கப்பட்ட தீ அருகே இருந்த பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனுக்கும் பரவியது.

    இதில் தீ மள மளவென பரவியதால் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள், பழைய வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவை எரிய தொடங்கின. இதன் காரணமாக கரும்புகை சுமார் 100 அடி உயரம் வரை கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் இந்த கரும்புகை தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் பரவியது. 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு புகைமூட்டமானது.

    குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் தென்பாகம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ மளமளவென பரவியது. குடோனில் சில பகுதி முழுவதும் தீக்கிரையாகின.

    சம்பவ இடத்திற்கு தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கராஜ், முகிலன் மற்றும் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய மாவட்ட உதவியாளர் நட்டார் ஆனந்தி, சிப்காட் ராஜ், தலைமையிலான தீயணைப்பு துறையினர், தெர்மல் நகர், ஸ்பிக் நகர், உள்ளிட்ட இடங்களில் இருந்து 6 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருந்ததாகவும், அதில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கழிவு பொருட்கள் எரிந்து சேதமாகி இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×