search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் டயர் வெடித்து ஆட்டோ மீது மோதி விபத்து- 2 பேர் பலி
    X

    கார் டயர் வெடித்து ஆட்டோ மீது மோதி விபத்து- 2 பேர் பலி

    • கார், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பண்ருட்டிக்கு நேற்று வந்தனர். இவர்கள் முத்தாண்டிகுப்பம் கருப்பசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நள்ளிரவு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர்.

    பின்னர் இன்று அதிகாலை முத்தாண்டிக்குப்பத்தில் இருந்து பண்ருட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் கிராமம் அண்ணா பல்கலைக்கழகம் அருகில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது சிதம்பரத்திலிருந்து பண்ருட்டிக்கு வந்து கொண்டிருந்த காரின் டயர் திடிரெனவெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கவுரி (வயது 56), பண்ருட்டி சூரகுப்பத்தை சேர்ந்த அஞ்சாபுலி (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி (65), பண்ருட்டி திருவள்ளுவர் நகர் நிலவழகி (45), பண்ருட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிகண்டன் (35), ஆட்டோ டிரைவர் பண்ருட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (63), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த லில்லி (52) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

    அவ்வழியே சென்றவர்கள் படுகாயமடைந்து கிடந்த 5 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலராமன், சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர்.

    விபத்தில் இறந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடி அமாவாசை வழிபாடு முடிந்து திரும்பிய 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×