search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
    X

    விசைத்தறியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

    • கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.
    • நூல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழக அரசு ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை வழங்கி வருகிறது. 1 கோடியே 79 லட்சம் வேட்டி-சேலை உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 238 கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் மூலம் நூல் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதில் 50 சதவீத உற்பத்தி ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஜூன் மாதம் நூல் வழங்கப்பட்டு டிசம்பர் மாதத்துக்குள் உற்பத்தி முடிக்கப்படும். ஜனவரி முதல் வாரத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையில்லா வேட்டி-சேலை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வருடத்திற்கு இதுவரை நூல் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி-சேலை உற்பத்தி திட்டத்தில், இந்த ஆண்டு சேலை உற்பத்திக்கு பருத்தி நூலுக்கு பதிலாக பாலிஸ்டர் நூல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விசைத்தறியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம் பகுதியில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூடப்பட்டிருந்தன. இதை போல் பள்ளிபாளையம், திருச்செங்கோட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதை தொடர்ந்து இன்று காலை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர். கே.இ.பிரகாஷ் தமிழ்நாடு விசைத்தறியாளர்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கடந்த வருடம் இலவச வேட்டி-சேலை தயாரிக்க எந்த நடைமுறை பின்பற்றபட்டதோ அதே நடைமுறை இந்த வருடமும் பின்பற்றபடும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற தமிழ்நாடு விசைத்தறியார்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

    இதை தொடர்ந்து விசைத்தறிகள் வழக்கம்போல் செயல்பட தொடங்கின.

    Next Story
    ×