search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிராம பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த யானையை காட்டுக்குள் விரட்டினர்
    X

    கிராம பகுதிகளில் மக்களை அச்சுறுத்தி வந்த யானையை காட்டுக்குள் விரட்டினர்

    • ஒற்றைக் காட்டு யானை நேற்று மாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
    • ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள வன பகுதியில் அந்த யானையை விரட்டிச் சென்று விட்டுள்ளனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி கிராமத்தில் ஒற்றைக் காட்டு யானை நேற்று மாலை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

    இது குறித்து வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இந்த ஒற்றைக் காட்டு யானையை காட்டுக்குள் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த ஒற்றைக் காட்டு யானை தாசம்பட்டி, கோடுபட்டி, பகுதியில் இருந்து சின்னாறை யொட்டி வனப்பகுதி வழியாக பெண்ணாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட நீர்குந்தி பகுதிக்குள் புகுந்தது.

    தொடர்ந்து போடூர் வழியாக வந்து கூத்தப்பாடி, ஜக்கம்பட்டி, கிராம பகுதியில் நுழைந்தது. கடந்த சில மாதங்களாக இரண்டு காட்டு யானைகள் ஒன்றிணைந்து பாப்பாரப்பட்டி, ஆலாமரத்துபட்டி, இண்டூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி விவசாய பயிர்களை உணவாக உட்கொண்டு வந்தன. இந்த இரண்டு யானைகளும் அவ்வப்போது ஊருக்குள் வருவதும் பொதுமக்கள் விரட்டி அடிப்பதுமாக இருந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கும்கி யானையை வரவழைத்து இரண்டு யானைகளில் ஒரு யானையை மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிக்கிலி அருகே பிடித்தனர்.

    பின்பு டாப்ஸ்லிப் மேற்கு தொடர்ச்சி மலையில் வாகனத்தின் மூலம் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர். தற்போது பென்னாகரம் அருகே கூத்தப்பாடி கிராமத்தில் நுழைந்த இந்த யானையை வன பகுதிகளுக்குள் விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் அருகில் ஜக்கம்பட்டி பகுதியில் உள்ள வன பகுதியில் அந்த யானையை விரட்டிச் சென்று விட்டுள்ளனர்.

    இந்த காட்டு யானை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரம், மேல் சவுளுப்பட்டி கிராமங்களுக்கு நேற்று 5 காட்டு யானைகள் வந்தன. இந்த யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கரும்பு, வாழை, தக்காளி, நெல் போன்ற பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பயிர் செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இதற்கிடையே வனத்துறையினர் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு காட்டுக்கு விரட்டினாலும் யானைகள் தண்ணீர், உணவு தேடி மீண்டும் கிராமங்களுக்கு வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. தற்போது அமானி மல்லாபுரம், மேல் சவுளுப்பட்டியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×