search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கூடல் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் வெடி மருந்து குடோன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஆக்கிரமிக்கப்பட்ட மண் சாலையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு, பள்ளம் தோண்டி சீரமைக்கும் கிராம மக்களை படத்தில் காணலாம். 

    நாகர்கூடல் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் வெடி மருந்து குடோன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    • குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய வெடி மருந்துகளை தேக்கி வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிக்கப்பட்ட நீரோடையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி சீரமைத்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள நாகர்கூடல் ஊராட்சி பகுதியில் இருந்து பங்குநத்தம் செல்லும் வழியாக வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் கல் குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய வெடி மருந்துகளை தேக்கி வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.

    அந்த குடோனுக்காக சாலை பகுதியில் இருந்த நீரோடைகளை மண் கொட்டி மூடி விட்டு வனப்பகுதி வழியாக சட்ட விரோதமாக மண் சாலை அமைத்து அதிக அளவில் அப்பகுதிக்கு வெடி மருந்துகள் கொண்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஊராட்சியில் எந்த அனுமதியும் பெறாமல் இந்த குடோன் செயல்படுவதாகவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். மேலும் இரவு நேரங்களில் அதிவேகமாக வாகனங்கள் பயணித்து வருவதால் அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட நீரோடையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி சீரமைத்தனர். அதனை தொடர்ந்து உரிய அனுமதி பெற்ற பின்னரே இப்பகுதியில் வெடி மருந்து குடோன் இயங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    அனுமதி இல்லாமல் செயல்படும் பட்சத்தில் ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது வெடி விபத்தோ ஏற்பட்டால் மிகப்பெரிய சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், இதனால் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×