search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொள்ளாச்சியில் தனியாக வசித்த மூதாட்டி மர்மச்சாவு- நகைகள் மாயம்
    X

    பொள்ளாச்சியில் தனியாக வசித்த மூதாட்டி மர்மச்சாவு- நகைகள் மாயம்

    • தெய்வானையம்மாளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • அந்த பெண் பிடிபட்டால் தான் தெய்வானையம்மாள் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என போலீசார் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள வடுகப்பாளையம் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் தெய்வானையம்மாள் (வயது 75). இவரது கணவர் மற்றும் 2 மகன்கள் இறந்து விட்டனர். இதனால் தெய்வானையம்மாள் தனியாக வசித்து வந்தார்.

    தெய்வானையம்மாளின் மற்றொரு வீட்டில் கேரளாவைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் வாடகைக்கு இருந்தார். அவர் தெய்வானையம்மாளுக்கு தேவையான சில உதவிகளை செய்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை அந்த கேரளா பெண், வீட்டு அருகே உள்ள பர்னீச்சர் கடைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் தெய்வானையம்மாள் வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய மகளுக்கு பிரசவம் என்பதால் தான் கேரளா புறப்பட்டுச் செல்வதாகவும் கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.

    பொள்ளாச்சி சேரன் நகரில் வசித்து வரும் தெய்வானையம்மாளின் மருமகளுக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அவரும், அக்கம்பக்கத்தினரும் தெய்வானையம்மாளின் வீட்டுக்கு நேரில் சென்று பார்த்தனர். அங்கு தெய்வானையம்மாள் இறந்து கிடந்தார்.

    அதேசமயம் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயின், அரை பவுன் மோதிரம், ஒரு ஜோடி கம்மல் ஆகியவை மாயமாகி இருந்தது. இதுபற்றி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தெய்வானையம்மாளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தெய்வானையம்மாள் வீட்டில் வசித்து வந்த கேரள பெண் யார், அவர் எதற்காக அவசரம், அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். தெய்வானையம்மாள் இயற்கையாக இறந்தாரா அல்லது அவரை கொலை செய்து விட்டு அந்த பெண் நகைகளுடன் தப்பிச் சென்றாரா என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பெண் பிடிபட்டால் தான் தெய்வானையம்மாள் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×