search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேவை குறைபாடு-பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
    X

    சேவை குறைபாடு-பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    • சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நிதி நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடபட்டுள்ளது
    • புகார்தாரர் எழுதிக் கொடுத்துள்ள அடமான ஆவணத்தை 4 வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள தெற்கு ஆயுதக்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் அருள்தாஸ்(வயது50). இவரது மனைவி ஜெயக்கொடி.கடந்த 2017 ஆண்டு அக்டோபர் மாதத்தில், வீடு கட்டுவதற்காக கும்பகோணத்திலுள்ள எக்வீடாஸ் சிறு நிதி வங்கியை அணுகி ரூ.7.50 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஜெயக்கொடி கடன் பெற்ற போது தனது கணவர் அருள்தாஸ்க்கு பாத்தியப்பட்ட சொத்தை பிணையமாக நிதி நிறுவனத்துக்கு அடமானம் எழுதி கொடுத்துள்ளார்.

    கடன் வழங்கிய அந்த வங்கி, இன்சூரன்ஸ் பிரீமியத்தை பெற்றுக்கொண்டு வீட்டுக் கடனுக்கான பாலிசியையும் வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜெயக்கொடி இறந்து விட்டார். இதையடுத்து அருள்தாஸ், தமது மனைவி இறந்துவிட்டதை தெரிவித்து இன்சூரன்ஸ் மூலம் கடனை முடித்துக்கொண்டு, தாம் எழுதிக் கொடுத்த அடமான ஆவணத்தை ரத்து செய்து, அதனை திரும்பத் தருமாறு வங்கி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

    அதற்கு நிர்வாகம், இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் வரை மாதாந்திர தவணைத் தொகையை செலுத்தினால் இன்சூரன்ஸ் பணம் வந்த பின்னர் ஜெயக்கொடி இறந்த பின்பு செலுத்தப்பட்ட தொகையை திரும்ப தருவதாகவும் அடமானத்தை ரத்து செய்து தருவதாகவும் தெரிவித்துள்ளது. இதனை நம்பி அருள்தாஸ் ஜெயக்கொடி இறந்த பின்னரும் மாதாந்திர தவணை தொகை ரூ.57 ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே மாதம், மொத்த கடனையும் திரும்ப செலுத்துமாறு இறந்தவர் பெயருக்கு வங்கி நிர்வாகம் அறிவிப்பு அனுப்பியதைக் கண்டு அதிரிச்சியடைந்த அருள்தாஸ், நிதி நிறுவனம் சேவை குறைபாடு புரிந்ததாக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான உறுப்பினர்கள் என். பாலு, வீ. லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் சேவை குறைபாட்டிற்காக மேற்கண்ட வங்கி இழப்பீடு தர வேண்டும். புகார்தாரரின் மனைவி இறந்த பின்பு வசூலிக்கப்பட்ட ரூ.57 ஆயிரத்தை புகார்தாரருக்கு திரும்ப வழங்க வேண்டும். மேலும் புகார்தாரர் எழுதிக் கொடுத்துள்ள அடமான ஆவணத்தை 4 வார காலத்துக்குள் ரத்து செய்து தரவேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×