search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியநாகலூர், மைக்கேல்பட்டியில் ஓடை தூர்வாரும் பணிகள்
    X

    பெரியநாகலூர், மைக்கேல்பட்டியில் ஓடை தூர்வாரும் பணிகள்

    • பெரியநாகலூர், மைக்கேல்பட்டியில் ஓடை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் மற்றும் மைக்கேல்பட்டி ஊராட்சிகளில் உள்ள ஓடைகள் தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:- அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநிலக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    அதற்காக ரூ.3.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில், நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் 3.30 கி.மீ நீளத்துக்கு பெரியநாகலூர் ஓடை ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும், தா.பழூர் ஒன்றியம், மைக்கேல்பட்டி ஊராட்சி அருகேயுள்ள சிந்தாமணி ஓடை 5 கி.மீ நீளத்திற்கு ரூ.29 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    பின்னர் அமைச்சர் சிவசங்கர் தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று அங்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம், கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வுகளில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார். இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர்கள் தினகரன், தியாகராஜன், மருதமுத்து மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×