search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு-  வாலிபர் படுகொலை
    X

    தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு- வாலிபர் படுகொலை

    • இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
    • பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

    இரணியல்:

    இரணியல் அருகே உள்ள நெய்யூர் செட்டியார் மடம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 38). இவரது மனைவி சோபிகா (37). இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நவநீதன் (45), அவரது மனைவி அமுதா (32). இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே தெரு குழாயில் குடிநீர் பிடிப்பது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    சம்பவத்தன்று சோபிகா வீட்டின் குப்பைகளை அந்த பகுதியில் தீ வைத்து எரித்த போது, நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா இருவரும் தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டனர். அப்போது சோபிகாவின் மாமனார் மணி அதை தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நவநீதன் இரும்பு கம்பியால் மணியை அடிக்க வந்தார். இதை பார்த்த சோபிகாவின் கணவர் ஜெகதீஷ் தடுத்த போது அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் ஜெகதீஷை, அமுதாவும் சரமாரியாக தாக்கினார்.

    இதை தடுக்க வந்த ராஜாக்கமங்கலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (18) என்பவரும் காயம் அடைந்தார். காயமடைந்த ஜெகதீஷ், மணிகண்டன் இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து சோபிகா இரணியல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நவநீதன் மற்றும் அவரது மனைவி அமுதா மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெகதீஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் நவநீதனை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமுதாவை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    பலியான ஜெகதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    Next Story
    ×