search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
    X

    கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

    • நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
    • அனைத்து பாசன குளங்களும் நிரம்பி வழிகின்றன.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்க்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் கலெக்டர் அழகு மீனாவும் குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

    அனைத்து துறை அதிகாரிகளும் பருவமழை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர நீர் நிலைகள் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் நீர் நிலைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    ஏற்கனவே குமரி மாவட் டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 551 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் நீர்மட்டம் 43.75 அடியாக உள்ளது. அணைக்கு 566 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து கோதையாறு, தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும் தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைகளின் நீர்மட்டத்தை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதற்கான அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.12 அடியாக உள்ளது. அணைக்கு 285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றாறு 1-அணையின் நீர்மட்டம் 14.24 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 14.58 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 50.11 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 17.10 அடியாகமும், பொய்கை நீர்மட்டம் 14.80 அடியாகவும் உள்ளது.

    மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசன குளங்களும் நிரம்பி வழிகின்றன. குளங்களின் நீர்மட் டத்தையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். சில குளங்களின் கரைப்பகுதியை பலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மழை எச்சரிக்கை காரணமாக காளிகேசத்திற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது. மேலும் அந்த கோவிலில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×