search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் நடுரோட்டில் வலம் வரும் கால்நடைகள்
    X

    ஊட்டியில் நடுரோட்டில் வலம் வரும் கால்நடைகள்

    • ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன.
    • கால்நடைகளை ரோட்டில் விட்டால் சம்மந்தப்பட்ட உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம்

    ஊட்டி,

    தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாதலங்களில் குறிப்பிட்டத்தக்கது ஊட்டி, இங்கு உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு சவாரி இல்லம், காட்சி முனையம் மற்றும் பச்சைப்பசேல் இயற்கை காட்சிகள் ஆகியவை சுற்றுலாபயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளன.

    சமவெளி பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் ஊட்டியில் எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையே நிலவும். இதனால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்திருந்து, அங்கு உள்ள குளிர்ச்சியான சீதோஷ்ண சூழ்நிலையை அனுபவித்து செல்கிறார்கள். இதனால் அங்கு கோடைகாலம் மட்டுமின்றி எப்போதும் கூட்டம் அலைமோதும்.

    எனவே ஊட்டியில் எப்போதும் வாகன நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் ஊட்டியின் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தும் வகையில் மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் நடுரோட்டில் சுற்றி திரிகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது. மேலும் ஒருசில மாடுகள், சுற்றுலா பயணிகளை முட்ட வருகின்றன. எனவே அவர்கள் ஒருவித அச்சத்துடன் வெளியே சென்று திரும்ப வேண்டி உள்ளது.

    ஊட்டி சாலையில் கால்நடைகளின் கழிவுகள் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே சுற்றுலா பயணிகள் மூக்கை பிடித்து கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. ஊட்டி குளிர்பிரதேசம் என்பதால் இங்கு மூடுபனி இருக்கும். பக்கத்தில் வந்தால் தான், எதிரில் நிற்பது யார் என்பது தெரிய வரும். ஊட்டி சாலையில் திரியும் கால்நடைகளால், வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்க வேண்டி உள்ளது.

    கால்நடைகளும் படுகாயம் அடைகின்றன. இதுதவிர ரோட்டில் திரியும் கால்நடைகள் வேறுவழியின்றி சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு வருகின்றன. இதனால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே ஊட்டி சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

    பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான கால்நடைகளை போக்குவரத்து ரோட்டில் திரியவிடக்கூடாது. அப்படி செய்தால் சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளருக்கு தலா ரூ.1500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.

    அதன்பிறகும் போக்குவரத்து சாலையில் கால்நடைகளின் நடமாட்டம் குறையவில்லை. எனவே நகராட்சி ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து, மார்க்கெட் பகுதியில் கட்டி வைத்தனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்தி கால்நடைகளை மீட்டு செல்லலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் எவரும் அபராதம் செலுத்த முன்வரவில்லை. இதற்கிடையே ஊட்டி மார்க்கெட் பகுதியில் அடைத்து வைத்து இருந்த கால்நடைகளை மாநகராட்சியால் சரிவர பராமரிக்க முடியவில்லை. எனவே அவை வேறுவழியின்றி திறந்து விடப்பட்டன.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஊட்டியில் மார்க்கெட், பஸ் நிலையம், காபிஹவுஸ் சதுக்கம் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகம் தென்படுகிறது. இதேபோல ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலை, ஹில்பங்க், பைக்காரா, தலைகுந்தா, பைன் பாரஸ்ட் ஆகிய பகுதிகளில் மாடுகள் உடன் குதிரைகளும் சர்வசாதாரணமாக நடுரோட்டில் ஹாயாக படுத்து கிடப்பதை பார்க்க முடிகிறது. எனவே ஊட்டியில் சுற்றி திரியும் கால்நடைகளின் தொல்லைக்கு நகராட்சி நிர்வாகம் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ஊட்டி நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ஊட்டியை சேர்ந்த விவசாயிகளில் சிலர் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்காக அவர்கள் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனாலும் இவற்றுக்கு அவர்களால் உரிய நேரத்தில் தீனி போட முடியவில்லை.

    எனவே கால்நடைகளை தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விட்டு விடுகின்றனர். காலை-மாலை நேரங்களில் மட்டும் பசு மாடுகளை ரோட்டில் இருந்து வீட்டுக்கு கூட்டிசென்று பால் கறந்து கொள்கின்றனர். அதன்பிறகு அவர்கள் பசுமாடுகளை கண்டுகொள்வது இல்லை.

    ஊட்டியை சேர்ந்த விவசாயிகள் மலைக்காய்கறிகளை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்காக குதிரைகளை வளர்த்து வருகின்றனர். அறுவடைகாலம் முடிந்த பிறகு, குதிரைகள் அப்படியே விடப்படுகின்றன. இதனால் அவை சாலையில் அனாதையாக திரியும் நிலை ஏற்பட்டு உள்ளது.போக்குவரத்து சாலைகளில் கால்நடைகளை திரிய விடாமல் வீட்டில் கட்டிவைத்து வளர்க்க வேண்டும். ஆனால் இங்கு வசிக்கும் பலர் அப்படி செய்வது இல்லை. எனவே அவை வேறுவழியின்றி போக்குவரத்து ரோட்டில் சுற்றி திரிகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊட்டி ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து மார்க்கெட்டில் கட்டி வைத்து அபராதம் விதிக்க முயன்றோம். ஆனால் எவரும் கால்நடைகளை மீட்க வரவில்லை. எனவே அவற்றை மீண்டும் அவிழ்த்துவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கோசாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே ஊட்டி சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து அங்கு கொண்டு சென்று பராமரிப்பது என்று முடிவு செய்து உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×