என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சென்னை
- 2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம்.
- பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 42 மாதகால நிர்வாகத் திறனற்ற தி.மு.க. ஆட்சியில், அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
இதுகுறித்து, 10.11.2024 அன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பிய போது, 42 மாதகால தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற வாரியப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என்று பதில் அளித்தேன்.
என்னுடைய இந்த கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது. யாருடைய பெயரும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், ஊடகங்களுக்கு முக்கிய குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் பி.இ.என். என்ற நிறுவனம் இந்த அறிக்கையை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.
"மொட்டைத் தாத்தன் குட்டையில் வீழ்ந்தது" போல் மனம் போன போக்கில் உண்மைகளை மறைத்து என்மீது காழ்ப்புணர்ச்சியோடு முதுகெலும்பில்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி, பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள், நான் கபட நாடகம் ஆடுவதாக ஓலமிடுகிறார்கள். எந்தச் சூழ்நிலையிலும் நாடகமோ, கபட நாடகமோ, சூழ்ச்சியோ செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.
2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம். இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, இன்றைக்கு அவர்களுக்கு பட்டை நாமம் போட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
சுமார் 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லி வரும் இந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். அம்மாவின் ஆட்சியிலோ, எனது தலைமையிலான அம்மாவின் அரசிலோ நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை என்பது மக்களுக்கே தெரியும்.
தெரிந்தோ, தெரியாமலோ கடந்த 42 மாதகால தி.மு.க. ஆட்சியில், அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எதுவுமே செய்யவில்லை என்பதை மொட்டை அறிக்கை வெளியிட்ட பேர்வழிகள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
18 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கருணாநிதி அதைச் செய்தார்; இதைச் செய்தார் என்ற புலம்பல்கள்தான் அந்த அறிக்கையில் அதிகமாக இருக்கிறதே தவிர, மு.க.ஸ்டாலின் அரசு என்ன செய்தது என்று எதுவும் இல்லை.
பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்களாக இருந்தால் ஏற்றுக்கொண்டு தங்களின் செயல்பாடுகளை திருத்திக்கொள்வார்கள். நேர்மையற்ற முறையில், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தந்து ஆட்சிக்கு வந்த இந்த தி.மு.க.விடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. இனியும் உண்மை நிலைகளை உணராமல், இதய சுத்தியோடு செயல்படும் எங்கள் மீது "வெந்ததைத் தின்று வாய்க்கு வந்தபடி உளறித் திரிபவர்களைப்போல்" பாய்ந்து பிராண்டினால், மக்கள் தக்க பதிலடி தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- அண்ணா இருந்தபோது அரசியல் மேடைகளில் தமிழ் வரலாறு பேசப்பட்டது.
- ரூ.1000-க்காக என் சகோதரி கையேந்துவது வறட்சியா? புரட்சியா?
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சமூக நீதிக்காக திமுக என்ன செய்தது.
* அண்ணா இருந்தபோது அரசியல் மேடைகளில் தமிழ் வரலாறு பேசப்பட்டது.
* மக்களை பற்றி சிந்தித்தவர் ஏன் டாஸ்மாக் கடைகளை திறந்தார்.
* ரூ.1000-க்காக என் சகோதரி கையேந்துவது வறட்சியா? புரட்சியா?
* அமரன் படமாக மட்டும் பார்க்கப்பட்டால் பிரச்சனை இருக்காது.
* மக்களை பற்றி சிந்திப்பதால் தான் தீபாவளி நேரங்களில் டாஸ்மாக்கில் கூடுதலாக மது விற்க ஏற்பாடு செய்துள்ளதா திமுக அரசு என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது.
- ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் மழை நின்ற பிறகு மத்திய மற்றும் வடசென்னையில் மழை மெதுவாக குறையும்.
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது. இதனால் நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாக மழை பதிவாகி உள்ளது.
சீரான மழை சுமார் 2 மணி நேரம் தொடரும். சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்யக்கூடும்.
ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் மழை நின்ற பிறகு மத்திய மற்றும் வடசென்னையில் மழை மெதுவாக குறையும்.
மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
- காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்தியிருப்பதை ஏற்றுகொள்ள முடியாது.
- ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலையளிக்கிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு மாநில கேடருக்கு ஒதுக்கப்பட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த 7 இ.கா.ப. அதிகாரிகளின் பெயர்களை வழங்கும்படி ஆணையிட்டுள்ளது. தமிழக காவல்துறை எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனம் தான் சான்று ஆகும்.
அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சிறுமியின் பெற்றோரை காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதுடன், சிறுமியின் தாய் நடத்தை மீதே சந்தேகம் தெரிவித்ததுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் போவதாகவும் மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் ஒரு பகுதியை கசிய விட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குடும்பத்தினரை அச்சுறுத்தியிருப்பதை ஏற்றுகொள்ள முடியாது.
காவல்துறையினரின் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி, வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மாதம் ஆணையிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது தான் தமிழக காவல்துறைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் அவமானம் ஆகும். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதிமன்றம் மாற்றிய நிலையில், அதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதன் மூலம் காவல்துறையின் தவறுகளுக்கு துணை போகிறது என்று தான் பொருளாகும்.
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் சீரழிந்து வருவது கவலையளிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை வெட்டுவோம் என்று கொக்கரித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை இன்று வரை கைது செய்யாத காவல்துறை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக சென்ற பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இதிலிருந்தே காவல்துறை எந்த அளவுக்கு ஆளும்கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது; எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்கு பழிவாங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
தமிழக காவல்துறைக்கு என சில சிறப்புகளும், பெருமைகளும் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் காவல் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- மண்ணடியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பலகார பொருட்களோடு பொட்டலமாக கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவை கடத்திய சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் உயர்ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாங்காங், டெல்லி, சென்னை விமான நிலையங்களின் பாதுகாப்பை மீறி கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சாவின் மதிப்பு 100 கிராம் ரூ.1 லட்சம் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மண்ணடியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாங்காங்கில் இருந்து டெல்லி வந்து விமானம் மூலம் சென்னைக்கு பலகார பொருட்களோடு பொட்டலமாக கடத்தி வந்து கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட உயர்ரக கஞ்சா சினிமா பிரபலங்களுக்கு விற்பனை செய்வதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- வழக்கறிஞர் அணியின் உதவியோடு ஊழல் பட்டியலை தயார் செய்யப்படுகிறது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் பயணத்தை தொடங்கினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்தது. மாநாட்டில் தமிழக அரசியல் மற்றும் கட்சியின் அடுத்தடுத்த திட்டங்கள், கொள்கைகளை விளக்கி அதிரடியாக விஜய் பேசினார்.
லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தை பரபரப்படைய செய்தது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களையும் விஜய் கட்சி மாநாடு உற்று நோக்க வைத்தது.
மாநாட்டை தொடர்ந்து விஜய் கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தை ஆளும், ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியலை தயார் செய்ய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக, அதிமுகவை குறி வைத்து ஊழல் பட்டியலை தவெகவினர் தயார் செய்து வருகின்றனர். வழக்கறிஞர் அணியின் உதவியோடு ஊழல் பட்டியலை தயார் செய்யப்படுகிறது.
ஆதாரப்பூர்வமாக, ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ஊழல் பட்டியல் தயார் செய்யப்படுகிறது. ஊழல் என்ற குற்றச்சாட்டை பிரதானமாக்கி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார்.
விஜய் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னர் பட்டியலை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
முடிந்தால் ஊழல் பட்டியலுடன் கவர்னரை சந்திக்கவும் தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் புறப்பட்டுச் சென்றார் அண்ணாமலை.
- 3 மாதங்களுக்குப் பிறகு சென்னை வரும் அண்ணாமலையை வரவேற்க பா.ஜ.க.வினர் பிரமாண்ட ஏற்பாடுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேல்படிப்புக்காக கடந்த செப்டம்பர் மாதம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். மூன்று மாதங்களாக அங்கு தங்கி படித்து வரும் அண்ணாமலையின் படிப்பு காலம் இந்த மாதம் நிறைவடைகிறது. வருகிற 29-ந் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
3 மாதங்களுக்குப் பிறகு சென்னை வரும் அண்ணாமலையை வரவேற்க பா.ஜ.க.வினர் பிரமாண்ட ஏற்பாடுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
அண்ணாமலை 29-ந்தேதி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் பற்றி எச். ராஜா தலைமையில் விரைவில் நிர்வாகிகள் கூடி ஆலோசிப்போம். இன்னும் நாட்கள் இருப்பதால் ஆலோசனை கூட்டம் மெதுவாக நடைபெறும் என்றார்.
- தொடர் மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதல் தற்போது வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மதியம் 1 மணி வரை சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று இரவு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- அமைச்சர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் உள்ளனர்.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ளது.
இதையொட்டி நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
துணை முதலமைச்சர் ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
* மழையை ஒட்டி சென்னை மாநகராட்சி சார்பில் 329 முகாம்கள் தனியார் மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
* அமைச்சர்கள், மேயர், மக்கள் பிரதிநிதிகள் களத்தில் உள்ளனர்.
* மழை நீரை அகற்ற மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன என்று கூறினார்.
#WATCH | Chennai: Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin inspects Tamil Nadu State Disaster Head Office, where monitoring is underway by state officials at the Chennai Ezhilagam Bhavan.As per IMD, heavy rain is likely to occur at isolated places over Chennai,… pic.twitter.com/Us1BTBlxzA
— ANI (@ANI) November 12, 2024
- நீர்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
- வைகை அணைக்கான ஒப்பந்தப்புள்ளி நாளை (புதன்கிழமை), அமராவதி அணைக்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 20-ந்தேதியும் திறக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக 15 பெரிய அணைகள் உள்பட 90 நீர் தேக்கங்கள் உள்ளன. இவை அனைத்தும் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நீர்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி.யாகும். (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர்) இதில் நேற்றைய நிலவரப்படி 165.637 டி.எம்.சி. இருப்பு, அதாவது 73.85 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
நீர்தேக்கங்களுக்கு பருவமழையால் ஆண்டு தோறும் வரும் நீரால் மண் அடித்து வரப்படுவதால் ஏரியின் கொள்ளளவு ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீர்தேக்கங்கள் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
அந்தவகையில் 2020-2021-ம் ஆண்டு நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கையின்போது சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர், தேனி மாவட்டத்திலுள்ள வைகை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேச்சிப்பாறை ஆகிய 4 அணைகளின் கொள்ளளவை மேம்படுத்தப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தூர்வாரும் பணிகளுக்கு சட்ட ரீதியான அனுமதி மற்றும் ஆலோசனைகளை பெற, தனியார் நிறுவனங்களை நியமிக்க நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது. ரூ.15.55 கோடியில் 4 அணைகள் தூர்வார முடிவு செய்துள்ள நிலையில், அதற்காக சட்டரீதியான அனுமதி, ஆலோசனைக் கட்டணம், தகுந்த முகமைகளை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை தொடங்குவதற்காக அரசு முதல் கட்டமாக நீர்வளத்துறைக்கு ரூ.3.63 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
அந்தவகையில், வைகை அணைக்கான ஒப்பந்தப்புள்ளி நாளை (புதன்கிழமை), அமராவதி அணைக்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 20-ந்தேதியும் திறக்கப்படுகிறது. அதேபோல், மேட்டூர் மற்றும் பேச்சிப்பாறை அணைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு நீர்வளத்துறையின் பரீசிலனையில் உள்ளது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு 4 அணைகளுக்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு 4 அணைகளும் தூர்வாரப்படுகிறது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வைகை அணையில் தேங்கியுள்ள மணலை 3 ஆண்டுகள் எடுத்து விற்பதன் மூலம் ரூ.315 கோடியும், பேச்சிப்பாறை அணை மூலம் ரூ.140 கோடியும், அமராவதி அணை மூலம் ரூ.250 கோடியும், மேட்டூர் அணை மூலம் ஓராண்டுக்கு ரூ.112 கோடியும் தோராயமாக வருவாய் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
- தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவி, உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியினை வழங்கிடும் வகையில், நடப்பாண்டில் ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் ஒரு சிறப்புத் திட்டத்தினை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
தேனீ வளர்ப்பினை சுயஉதவிக் குழுவினரிடையே ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு தேனீ வளர்ப்புத் தொகுப்பிற்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதி வழங்கி, தமிழ்நாட்டில் மொத்தம் 74 தேனீ வளர்ப்புத் தொகுப்புகளை உருவாக்குவதற்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
20 மகளிர் கொண்ட ஒவ்வொரு தொகுப்பிலும் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 5 தேனீ பெட்டிகள் வீதம் மொத்தம் 100 தேனீப் பெட்டிகள் வாங்குவதற்காக ரூ.1.5 லட்சமும், முகக்கவசம், புகைமூட்டி, தேனீ பிரஷ், தேன் பிரித்தெடுக்கும் கருவி போன்ற உபகரணங்கள் வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாயும், தேன் சுத்திகரிப்பு, பதப்படுத்தும் எந்திரம் கொள்முதல் செய்வதற்கு ரூ.1.15 லட்சமும், இந்த எந்திரங்களை நிறுவுவதற்கு 11 ஆயிரம் ரூபாயும், தேனீ வளர்ப்பு, தேன் பதப்படுத்துதல் தொடர்பான பயிற்சிக்கு 4 ஆயிரம் ரூபாயும் என ஒவ்வொரு தொகுப்புக்கும் ரூ.3 லட்சம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் சென்னை மாவட்டத்தைத் தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, சுயஉதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிர் தேர்வு செய்யப்பட்டு, தேனீ வளர்ப்பில் முனைப்பாக ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர்கள் அல்லது தோட்டக்கலைத்துறை அல்லது கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அல்லது வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் தேனீ வளர்ப்புத் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
விரைவில், அனைத்து பயனாளிகளுக்கும் தேவையான தேனீப் பெட்டிகளை தோட்டக்கலைத்துறையின் ஒருங்கிணைப்புடன் தரமான நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு மாவட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் 1480 சுயஉதவிக் குழு மகளிர் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ரூ.2.22 கோடி நிதி ஒதுக்கீட்டில் அறிமுகப்படுத்தி உள்ள இத்திட்டத்தின் மூலம் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பருத்தி, சூரிய காந்தி, தென்னை, மக்காச்சோளம், கம்பு, சோளம், பழப்பயிர்கள், காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெற இயலும்.
மேலும், தேனீ வளர்ப்பில் உள்ள நுணுக்கங்களை சுயஉதவிக் குழு மகளிர் நன்கு தெரிந்து கொண்டு, அதன் மூலம் தேன் மட்டுமல்லாது, தேன் மகரந்தம், ராயல் ஜெல்லி, தேன் மெழுகு போன்ற தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் துணைப் பொருட்களையும் சேகரித்து நல்ல வருமானம் ஈட்ட இயலும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து கொண்டிருக்கிறது.
சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,275-க்கும், ஒரு சவரன் ரூ.58,200-க்கும் தங்கம் விற்பனை ஆனது. தங்கம் விலை நேற்றும் குறைந்தது.
முந்தைய நாளை காட்டிலும் கிராமுக்கு ரூ.55 சரிந்து ரூ.7,220-க்கும், சவரனுக்கு ரூ.440 சரிந்து ரூ.57,760-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.
எப்போதெல்லாம் தங்கம் விலை குறையுமோ, அப்போதெல்லாம் வெள்ளியின் விலையும் குறையும். அந்தவகையில் நேற்று வெள்ளியின் விலையும் குறைந்தது. முந்தைய நாளை விட கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.102-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56 ஆயிரத்து 680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,760
10-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
09-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,200
08-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
07-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-11-2024- ஒரு கிராம் ரூ. 102
10-11-2024- ஒரு கிராம் ரூ. 103
09-11-2024- ஒரு கிராம் ரூ. 103
08-11-2024- ஒரு கிராம் ரூ. 103
07-11-2024- ஒரு கிராம் ரூ. 102
தங்கத்தின் மீதான முதலீடு திடீரென குறைந்திருப்பதும், சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து இருப்பதுமே தங்கம் விலை சரிவுக்கு காரணம், என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்